வைகுண்ட ஏகாதசி - புராண வரலாறு


மூவுலகையும் தனது கொடூரச் செயல்களினால்,துன்புறுத்தி வந்த முரன் என்னும் அசுரனை அழித்து,மக்களைக் காக்க மகாவிஷ்ணு முடிவு செய்தார். முரனுடன் 1000 ஆண்டுகளாக நடந்த கடுமையான போரில் ,மிகவும் களைப்படைந்த மகாவிஷ்ணு பத்ரிகாஸ்ரமத்தில் உள்ள ஒரு குகையில் படுத்து ஓய்வெடுத்தார்.

இதையே தனக்கு சாதகமாக்கி கொண்ட'முரன்' பகவானை கொல்லத் துணிந்தான். அப்போது அவருடைய திவ்ய சரீரத்தில் இருந்து அவருடைய சக்தி ஒரு பெண் வடிவில் வெளிப்பட்டது. அவளை அசுரன் நெருங்கிய வேளையில் அவளிடம் இருந்து வெளிப்பட்ட ஓங்காரமே, அசுரனை எரித்து சாம்பலாக்கியது.

விழித்தெழுந்து நடந்ததைக் கண்ட நாராயணன், அந்த சக்திக்கு 'ஏகாதசி'எனப் பெயரிட்டு, உன்னை விரதம் இருந்து போற்றுவோருக்கு நான் சகல நன்மைகளையும் தருவேன் என வரமளித்தார். தனக்குள் மீண்டும் அந்த சக்தியை ஏற்றுக்கொண்டார். எனவே ஏகாதசி அன்று விழிப்புடன் இருந்து விரதம் கடைபிடித்தால் நாராயணனின் அருள் பரிபூரணமாக கிடைக்கப்பெற்று நீங்காப் புகழுடன் வாழ்வோம் என்பது ஐதீகம்.

ஒரு சமயம் பிரளயம் ஏற்பட, அதில் மூழ்கிய பூலோகத்தை மறுபடியும் உண்டாக்க விரும்பி, திருமால் நான்முகனைப் படைத்தார். நான்முகனை அழிக்க தோன்றிய மது, கைடபன் என்னும் இரண்டு அசுரர்களையும், தடுத்த திருமாலிடமே அவர்கள் சண்டைக்கு வந்ததால் திருமால் அவர்களை அழித்தார். திருமாலின் கையால் மோட்சம் பெற்ற அவர்கள் திருமாலிடம் "நாங்கள் உம் அருளால் சித்தியடைந்து ஸ்ரீவைகுண்டத்தில் வாஸம் செய்ய வேண்டும்" என்று மன்றாடினார்கள்.

அந்த வேண்டுகோளை ஏற்று திருமால் மார்கழி சுக்லபக்ஷ ஏகாதசியன்று விண்ணகரத்தின் வடக்கு நுழைவாயிலைத் திறந்தார். அதன் வழியாக சத்யலோகத்திற்கு மேலுள்ள பரமபதத்திற்கு அனுப்பினார். அப்போது அந்த அசுரர்கள் "மார்கழி சுக்ல ஏகாதசியன்று எங்களுக்கு அருளிய சுவர்க்க வாசல் திருநாளை பூவுலகில் சிறந்த திருவிழாவாக அனைவரும் பின்பற்ற வேண்டும்.

அன்று திருக்கோவில்களில் சுவர்க்கவாசல் வழியே எழுந்தருளும் பெருமாளை தரிசிப்பவர்கள் அனைவரும் மோக்ஷம் பெற வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர். அதன்படியே நடக்கும் எனத் திருமாலும், அசுரர்களுக்கும் ஆசி வழங்கினார். அந்த திருநாள் தான் வைகுண்ட ஏகாதசித் திருநாளாக வைணவத் திருத்தலங்களில் உற்சவமாகக் கொண்டாடப்படுகிறது.



Leave a Comment