சந்திராஷ்டம தினத்தில் செய்யக்கூடாதவை....


இறைவன் சிருஷ்டித்த இந்த உலகில் ஒருவர் பிறக்கும்போது முக்கியமாக கருதப்படுவது லக்னமாகும். லக்னம் என்பது உயிர் போன்றது. லக்னம் அடுத்து நாம் பார்க்கக்கூடியது ராசியே. இந்த ராசி என்பது நமது ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் நிலையை கொண்டே நமது ஜென்ம ராசியானது நிர்ணயிக்கப்படுகிறது. நாம் பிறக்கும்போது சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருக்கின்றாரோ அதுவே நமது ஜென்ம நட்சத்திரமாகும்.

சந்திரன் இருபத்தி ஏழு நட்சத்திரங்களில் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரம் என ஒவ்வொரு நட்சத்திரத்திலும் தனது பயணத்தை தொடங்குகிறார். அதனால் தான் என்னவோ லக்னமான உயிர் சந்திரன் பயணிக்கும் நட்சத்திரத்தினால் சில சுப பலன்களையும், அசுப பலன்களையும் அனுபவிக்கின்றது.

சந்திரன் ஒவ்வொரு இராசியிலும் இரண்டே கால் நாட்கள் சஞ்சாரம் செய்வார். எனவே ஒவ்வொருவருக்கும் ஒரு மாதத்தில் இரண்டே கால் நாட்கள் சந்திரன் அஷ்டமத்தில் இருக்கும் காலம் சந்திராஷ்டம காலம் ஆகும்.

சந்திராஷ்டமம் - சந்திரன் அஷ்டமம்

அஷ்டமம் என்றால் எட்டு என்று பொருள்.

உடலுக்கும் மனதிற்கும் காரணமான சந்திரன் அஷ்டம இடத்தில் அதாவது ஜென்ம ராசிக்கு எட்டாம் இடத்தில் சந்திரன் இருக்கும்போது சந்திரஷ்டமம் ஏற்படுகின்றது. அல்லது நாம் பிறந்த நட்சத்திரத்திற்கு பதினேழாவது நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்யும் காலம் சந்திராஷ்டமம் ஆகும்.

ஜோதிடத்தில் சந்திரன் 'மனோக்காரகன்" என்று அழைக்கப்படுவார். நம் மனதையும் எண்ணங்களையும் வழிநடத்தும் சந்திரன் மறைவு ஸ்தானமான எட்டாம் இடத்தில் மறைந்தால் இந்த உடலும் மனமும் சந்திரன் அஷ்டமத்தில் பயணிக்கும் அந்த இரண்டே கால் நாட்கள் பலவிதமான இன்னல்களை அனுபவிக்கின்றது.

சந்திரன் அஷ்டமத்தில் இருக்கும்போது அவருடைய பார்வை நமது ஜென்ம ராசியின் இரண்டாம் இடமான குடும்பம் மற்றும் வாக்கு ஸ்தானத்தை பார்ப்பதால் பல இன்னல்கள் ஏற்படுகின்றன.

சந்திராஷ்டம தினங்களில் நமது மனமும் எண்ணங்களும் தெளிவானதாக இருக்காது. எனவே, சந்திராஷ்டம தினங்களில் முக்கிய பேச்சுவார்த்தைகளை தவிர்த்து விட வேண்டும்.

திருமணம் போன்ற சுப செயல்கள் நிர்ணயிக்கும்போது மணமகள், மணமகன் ஆகிய இருவருக்கும் சந்திராஷ்டம தினங்கள் இல்லாத நாட்களாக இருக்க வேண்டும்.

சந்திராஷ்டம தினங்களில் புதிய தொழில் துவங்குதல் மற்றும் புதிய முயற்சிகளை தவிர்ப்பது நன்று.

கிரக பிரவேசம், பால் காய்ச்சுதல், வளைகாப்பு போன்ற சுப செயல்களை சந்திராஷ்டம தினங்களில் தவிர்ப்பது உத்தமம்.

சந்திராஷ்டம தினங்களில் வாகனங்களில் வேகம் குறைத்து நிதானத்துடன் செல்ல வேண்டும்.

பணிபுரியும் இடங்களில் பதற்றம், கோபம், ஒரு விதமான சோம்பல் உணர்வு, மறதி மற்றும் வாக்குவாதம் போன்றவை ஏற்படும்.



Leave a Comment