திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது ஸ்ரீரங்கம் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா டிசம்பர் 7 ஆம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது. 108 திவ்ய தேசங்களில் முதன்மையானது என போற்றப்படுகிறது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில்.
ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் எல்லாம் முதன்மையானது வைகுண்ட ஏகாதசி திருவிழாவாகும். பகல் பத்து, ராப்பத்து, இயற்பா என மொத்தம் 21 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறப்பு சிகர நிகழ்ச்சியாகும்.
இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா வருகிற 7-ந்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது. அன்றைய தினம் இரவு 7 மணிக்கு கோவில் மூலஸ்தானத்தில் ஆரம்பமாகும் திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சி தொடர்ந்து சந்தனு மண்டபத்தில் நடைபெறும். அப்போது அரையர்கள் அபிநயம் வியாக்யானத்துடன் பாடல்களை பாட நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.
மறுநாள் பகல்பத்து உற்சவத்தின் முதல் நாள் நிகழ்ச்சியாகும். அன்று காலை 7 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி 7.45 மணிக்கு அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருள்வார். பகல் பத்து இரண்டாம் நாளில் இருந்து நம்பெருமாள் காலை 6.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து வெவ்வேறு சிறப்பு அலங்காரத்தில் புறப்படுவார்.
பகல் பத்து உற்சவத்தின் 10-வது நாளான டிசம்பர் 17-ந்தேதி நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் காட்சி அளிப்பார். மறு நாள் (18-ந்தேதி) பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்படும். அன்று அதிகாலை 4.15 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்படும் நம்பெருமாள் அதிகாலை 5.30 மணிக்கு சொர்க்க வாசலை கடந்து திருக்கொட்டகையில் பக்தர்கள் மத்தியில் எழுந்தருள்வார். அன்று முதல் பத்து ( ராப்பத்து) நாட்கள் தொடர்ந்து ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். 28-ந்தேதி நம்மாழ்வார் மோட்சத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெறும்.
Leave a Comment