திருப்பதியில் லட்டுக்கு புதிய கவர்...


திருமலையில் பிளாஸ்டிக் பயன்படுத்த கடந்த 1 ஆம் தேதி முதல் தடை திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்தது. தேவஸ்தானம் முதல் கட்டமாக லட்டுக்கு பிளாஸ்டிக்கிற்கு பதில் அட்டை பெட்டியில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் உலகப்புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களுக்காக தினந்தோறும் 2 முதல் 3 லட்சம் லட்டுகள் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த லட்டுகளை கொண்டு செல்ல 50 மைக்ரான் கொண்ட பிளாஸ்டிக் கவர்களை ரூ 3 விலைக்கு தேவஸ்தானம் விற்பனை செய்து வருகிறது.

அக்டோபர் 2 தேதி முதல் திருப்பதி மாநகராட்சியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நவம்பர் 1 ஆம் தேதி முதல் திருமலையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த திருமலை-திருப்பதி தேவஸ்தானமும் தடை விதித்துள்ளது. திருமலையில் உள்ள கடைகள், ஓட்டல்களில் உணவுப் பொருட்கள் மற்றும் பொம்மைகள் பிளாஸ்டிக் பையில் அடைத்து விற்பனை செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளை எடுத்து செல்ல அதிகளவில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கவர்களையும் பயன்படுத்துவதை தவிர்க்கும் விதமாக அட்டைப்பெட்டியில் லட்டை அடைத்து வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதனை தொடர்ந்தும் முதல் கட்டமாக ஒரு லட்சம் அட்டைப்பெட்டிகளை சோதனை முறையில் பயன்படுத்தி லட்டு வழங்க உள்ளனர்.

முதல் கட்டமாக வி.ஐ.பி. தரிசனம் மற்றும் கல்யாண உற்சவத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு அட்டை பெட்டியில் லட்டு பிரசாதம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சோதனை முயற்சி வெற்றிபெறும் பட்சத்தில் வருங்காலங்களில் அட்டைப் பெட்டியில் அடைத்து லட்டு பிரசாதங்களை வழங்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



Leave a Comment