திருமண வரம் தரும் மேலை திருமணஞ்சேரி


நாகப்பட்டினம் மாவட்டம், குத்தாலம் வட்டத்தில், மயிலாடுதுறை குத்தாலம் வழித் தடத்தில், குத்தாலத்தில் இருந்து அஞ்சலாறு வழியே மேலைத் திருமணஞ்சேரி செல்லலாம். புகழ்பெற்ற திருமணஞ்சேரி கோவிலுக்கு மேற்கே 1 கி.மீ. தொலைவில் உள்ளது எதிர்கொள்பாடி எனும் மேலைத் திருமணஞ்சேரி.

திருமணஞ்சேரியில் பார்வதியை மணம் புரிய வந்த மாப்பிள்ளை சிவபெருமானை, எதிர் கொண்டு அழைத்த தலம், இந்திரன் மற்றும் ஐராவதம் பெற்ற சாபத்தை நீக்கிய திருக்கோவில், பெண்களுக்கு நல்ல வரன் அமைய உதவும் தலம், மணமக்களின் பிணக்கு தீர்க்கும் திருக்கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்ட தலமாக விளங்குவது, எதிர்கொள்பாடி என்னும் மேலைத் திருமணஞ்சேரி திருத்தலம்.

இந்த ஆலயத்தின் புராண வரலாறு, இத்தலத்தைச் சுற்றியுள்ள தலங்களையொட்டி அமைந்துள்ளது. சிவபெருமானின் சாபத்தால் பசுவாக மாறிய அன்னை பார்வதி, தேரழுந்தூரில் ஈசனை வழிபட்டாள். பிறகு திருக்கோழம்பத்திற்கு வந்து வழிபாடு செய்தாள். அப்போது பசுவின் குளம்படி சிவலிங்கத் திருமேனியில் பட்டு வடு ஏற்பட்டது. தொடர்ந்து திருவாடுதுறையில் அன்னையின் சாபம் நீங்கியது.

இதையடுத்து அத்தலத்திலேயே பரத்வாஜ முனிவர் நடத்திய யாகத்தில் குழந்தையாக தோன்றி அன்னை வளர்ந்து வந்தாள். அன்னையானவள் பருவம் அடைந்ததும், திருமணஞ் சேரியில் திருமணம் புரிய வந்த மாப்பிள்ளை சிவபெருமானை, மாமனாரான பரத்வாஜ மகரிஷி எதிர்கொண்டு வரவேற்ற தலம், எதிர்கொள்பாடி என்று பெயர்பெற்றது. திருமண வேள்வி நிகழ்ந்த தலம் திருவேள்விக்குடி. திருமணம் நடந்த தலம் திருமணஞ்சேரி என புராணம் கூறுகிறது.

இந்திரன் சாபம் :

காசியில் சிவதரிசனம் முடிந்து திரும்பிய துர்வாச முனிவர், எதிரே இந்திரனும், ஐராவதமும் வருவதைக் கண்டான். அப்போது தன்னிடம் இருந்த இறைவனை பூஜித்த மலர் மாலையை, இந்திரனுக்கு பரிசளித்தார், துர்வாச முனிவர். அதனைப் பெற்றுக்கொண்ட இந்திரன், அதை அலட்சியமாக தான் பவனி வந்த ஐராவதம் யானையின் தலை மீது வைத்தான். மலரில் வண்டுகள் மொய்த்ததால், ஐராவதம் அம்மலரை வீசி கீழே தள்ளியது. இதனால் கோபம் கொண்ட முனிவர், இந்திரனுக்கு நோய் பீடிக்கவும், ஐராவதம் காட்டு யானையாகவும் மாற சாபமிட்டார்.

இதனால் மனம் வருந்திய இருவரும் பல்வேறு சிவாலயங்களைத் தரிசித்துவிட்டு இறுதியாக எதிர்கொள்பாடி திருத்தலத்திற்கு வந்தனர். இங்கே காட்டு யானை தீர்த்தம் உருவாக்கிட, இந்திரனும் யானையும் சேர்ந்து ஈசனை வழிபட்டனர். இதையடுத்து இந்திரனின் சாபம் நீங்கியது. காட்டுயானை மீண்டும் ஐராவதமாக மாறியது. அதன் காரணமாக இத்தல இறைவன் ஐராவதத்தின் பெயரைத் தாங்கி ‘ஐராவதீஸ்வரர்’ ஆனார்.

ஐராவதீஸ்வரர், மலர்குழல் நாயகி

ஆலய அமைப்பு :

இக்கோவிலை மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கருங்கல்லால் கட்டியவர், கீரனூர் கிழவன் அரசுக் குடியான் திருநீலகண்ட சேரமான் சோழன் ஆவார். மூன்று நிலை ராஜகோபுரம் அமைத்தவர் தொண்டை மண்டலத்து குன்றத்தூர் நாராயண முதலியார் மகன் வயிர முதலியார் ஆவார்.

மேற்கு நோக்கிய மூன்றுநிலை ராஜகோபுரத்தை இங்கு தரிசிக்கலாம். ஆலயத்தின் உள்ளே கொடிமர விநாயகர், பலிபீடம், நந்தி, நேர்எதிரே ஐராவதீஸ்வரர் சதுரவடிவ ஆவுடையாரில் மேற்கு முகமாய் காட்சி அருளுகின்றார். இவருக்கு மத்யானேஸ்வரர் என்ற திருப்பெயரும் உள்ளது.

நந்தியின் இடதுபுறம் கஜலட்சுமி வீற்றிருக்கிறார். அவருக்கு அருகில் அன்னை மலர்க் குழல்நாயகி தெற்கு முகமாய் காட்சி தருகிறார். இந்த அன்னை யானவள், சுகந்த குந்தளாம்பிகை, பெருங் கருணை பிராட்டியார் எனப் பலவாறு போற்றப்படுகின்றாள். இது தவிர வழித் துணை விநாயகர், வள்ளி- தெய்வானை சமேத சுப்பிரமணியர், பாலசரஸ்வதி, தாமரை பீடத்தில் துர்க்கை, சண்டிகேஸ் வரர், சொர்ண பைரவர் திருமேனிகளும் உள்ளன. இந்த ஆலயத்தின் தல விருட்சம் பன்னீர் மரமாகும்.

தலச்சிறப்பு :

இத்தலம், பெண்ணைப் பெற்றவருக்கு, நல்ல வரன் கிடைக்க வரம் தந்துதவும் திருத்தலமாக விளங்குகிறது. அதே போல, மணமக்கள் பிணக்கு தீர்க்கும் திருக்கோவிலாகவும், பதவியை இழந்தவர்களுக்கு மீண்டும் பதவியைப் பெற உதவும் தலமாகவும் இந்த ஆலயம் திகழ்கிறது. காவிரியின் வடகரைத் தலங்களில் 24-வது தலமாக இந்தக் கோவில் போற்றப்படுகிறது. ஆலயத்தின் தலத் தீர்த்தம், ஐராவதத் தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.

சித்திரையில் இந்திர விழா, கார்த்திகை சோமவாரங்கள், மார்கழி திருவாதிரை, மாசியில் மகா சிவராத்திரி, திருக்கல்யாணம் மற்றும் அனைத்து பிரதோஷங்களும் இந்த ஆலயத்தில் வெகு சிறப்பாக நடத்தப்படுகின்றன. கி.பி. 1879-ம் ஆண்டு அருணாசலம் பிள்ளை குமாரர்கள், இந்த ஆலயத்திற்கு 35 ஏக்கர் நிலங்களை எழுதி வைத்து குடமுழுக்கு நடத்தி வைத்துள்ளனர். அது முதல் ஆறு தலைமுறைகளாக இன்றும் அந்த பரம்பரையைச் சேர்ந்தவர்களே அறங் காவலர்களாக இருந்து வருகின்றனர்.

இந்த ஆலயத்தில் தினமும் காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 3.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் சுவாமி தரிசனம் செய்யலாம்.

மணமக்களின் பிணக்கு தீர்க்கும் திருக்கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்ட தலமாக விளங்குவது, எதிர்கொள்பாடி என்னும் மேலைத் திருமணஞ்சேரி திருத்தலம்.

திருமண வரம் தரும் மேலைத் திருமணஞ்சேரி திருத்தலம்
‘தந்தையாரும் தவ்வை யாரும் எட்டனைச் சார்வாகார்
வந்து நம்மோ டுள்ள ளாவிவான நெறிகாட்டுஞ்
சிந்தையீரே நெஞ்சீனிரே திகழ்மதி யஞ்சூடும்

எந்தை கோயில் எதிர்கொள்பாடி என்ப தடைவோமே’

-சுந்தரர் பாடிய தேவாரம்



Leave a Comment