சபரிமலை ஐயப்பன் – அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்


சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் கறுப்பு நிற ஆடை அணிவதற்கும், ருத்ராட்சம் மற்றும் துளசி மாலையிட்டுக் கொள்வதற்கும் காரண காரியங்கள் உண்டு. பொதுவாக கறுப்பு ஆடை அணிந்து ஐயப்ப மந்திரங்களை உச்சரித்தால் பலாப்பலன்கள் அதிகம்.

மனிதனுள் தேவ, அசுர குணங்கள் இரண்டும் கலந்துள்ளன. எதிர்மறையான சிந்தனைகள் மாறி மனசாந்தியும், சமாதானமும் கிடைக்க இறைவனிடம் நம்மை சரணாகதியாக்கி வழிபடுவது நலம் தரும். அப்படி வழிபடும்போது கறுப்பு ஆடை அணிவதும், ருத்ராட்ச மாலை அணிவதும் ஜெபத்தின் சக்தியை அதிகரிக்க செய்யும்.

சபரிமலை அடைந்து 18 படிகளின் மீதேறி நின்றவுடன் நம் கண்ணில்படும் வேதவாக்கியம் ‘தத்வமசி’. ‘நீயே அது’ என்பதே இதன் பொருள். மூலவராகக் காட்சிதரும் அய்யன் ஐயப்பனும், விரதம் இருந்து சபரிமலை செல்லும் பக்தனும் ஒன்றே என்பதை மீண்டும் மீண்டும் அழுத்தமாக சொல்லவே இந்த வாக்கியம் பதினெட்டு படிகள் கடந்தவுடனே பார்வையில் படும்படி பதிக்கப்பட்டுள்ளது.

மலையாள தேசமான கேரளாவில் கோயில்கள் வழிபடும் முறைகளில் சாஸ்திர சம்பிரதாயங்கள் முறையாக கடைபிடிக்கப்படும். இதன்படி கோயில்களில் பிரகாரத்தை பக்தர்கள் சுற்றி வருவதில் கணக்குகள் உள்ளது. விநாயகர் கோயிலை ஒரு முறையும், சூரியனை இரண்டு முறையும், சிவாலயத்தில் மூன்று முறையும், விஷ்ணு கோயிலில் நான்கு முறையும், முருகனை ஐந்து முறையும், பகவதி அம்மன் கோயிலில் ஐந்து முறையும் வலம் வரவேண்டும். ஐயப்பன் மற்றும் சாஸ்தா கோயில்களில் நான்கு முறை வலம் வர வேண்டும் என்பது சாஸ்திரம்.

லட்சக்கணக்கான பக்தர் கூட்டம் குவியும் சபரிமலையில் அதுவும் ஐயப்ப சீசனில் இது சாத்தியமில்லை என்றாலும் மாதபூஜைக்கு சபரிமலை மற்று சாஸ்தா கோயில்களுக்கு செல்லும் போது இந்த சாஸ்திரத்தை கடைபிடிப்பது பெரும் பலன்களை தரும்.



Leave a Comment