இருமுடியின் தத்துவத்தை தெரிந்து கொள்வோம்....


சபரிமலையின் யாத்திரையில் ஐயப்ப பக்தர்கள் ஒரு மண்டலம் விரதமிருந்து விரதத்தின் முடிவில் இருமுடி சுமந்து ஐயனை தரிசிக்கின்றனர்.
ஐயப்பனுக்காக 41 நாட்கள் விரதம் இருந்து ஐயப்பனை தரிசிக்க சபரிமலை யாத்திரை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மட்டுமே இருமுடியை தலையில் வைத்து சுமந்து செல்லும் தகுதியைப் பெறுகிறார்கள். தலையில் இருமுடி இல்லாதவர்கள் பரிசுத்த படிகளான புனிதமான படிகளாகக் கருதப் படும் 18 படிகளை ஏற அனுமதிக்கப் படுவதில்லை


இருமுடி சுமந்து செல்வது ஏன்? இருமுடியின் மகத்துவம் என்ன என்பது குறித்து பார்ப்போம்...


இறைவனுக்கு உரிய இறைவனுக்கு படைப்பதற்கான பொருட்களை வைப்பதற்கு என்று தனிப்பட்ட முறையில் உருவாக்கப் பட்ட இரு அறைகளைக் கொண்ட பை இருமுடி. தலையில் வைத்து சுமந்து செல்லும் இருமுடி பருத்தித் துணியால் கைகளால் தைக்கப் பெற்றதாக இருக்க வேண்டும்.
மையத்தில் திறக்கும் படி வடிவமைக்கப் பட்டுள்ள, இருமுடியின் முன்னால் உள்ள அறை முன்முடி என்றும் இருமுடியின் பின்னால் உள்ள அறை பின்முடி என்றும் அழைக்கப் படுகிறது .


இருமுடியின் முன்னால் உள்ள அறையில் இறைவனுக்கு உரிய அதாவது ஐயப்பனுக்கு உரிய பக்தி பொருட்கள் அனைத்தும் நிரப்பப் பட்டிருக்கும்.
இருமுடியின் பின்னால் உள்ள அறை புனித யாத்திரை மேற்கொள்ளும் ஐயப்ப பக்தர்களுக்காக ஒதுக்கப் பட்டுள்ளது .அதில் புனித யாத்திரை மேற்கொள்ளும் ஐயப்ப பக்தர்களின் தேவையை நிறைவு செய்வதற்குத் தேவையான அனைத்து விதமான பொருட்களும் அதில் நிரப்பப் பட்டிருக்கும்.


இருமுடி கொண்டு செல்வதற்கான காரணங்கள் ....
பண்டைக் காலங்களில் ஐயப்பனுக்காக விரதம் இருந்து இருமுடியை சுமந்து செல்லும் ஐயப்ப பக்தர்கள் இருள் சூழ்ந்த காட்டுப் பகுதிகளுக்குள் செல்ல வேண்டி இருந்தது.
வனப் பகுதியில் உள்ள கோயில் என்பதால் வனங்களில் இருள் நிறைந்த பகுதிகளிலும், கரடு முரடான பகுதிகளிலும் செல்ல வேண்டி இருந்தது . உணவுக்கான வசதி கிடைக்காது என்பதால் இறைவனுக்குரிய வழிபாட்டுப் பொருட்களுடன் ஐயப்ப பக்தர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களையும் கொண்டு சென்றனர்.
இறைவனுக்கு உரிய அதாவது ஐயப்பனுக்கு உரிய வழிபாட்டுப் பொருட்களும் ,ஐயப்ப பக்தர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களும் ஒன்றுடன் ஒன்று கலந்து விடக்கூடாது என்பதற்காக இரண்டையும் தனித் தனியாகப் பிரித்து பையில் கட்டி கொண்டு செல்லும் வழக்கம் இருந்தது .
இரண்டு பொருட்களையும் வேறுபடுத்தி அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பையின் முன் பகுதியில் இறைவனுக்கு உரிய வழிபாட்டுப் பொருட்களையும், பையின் பின்பகுதியில் ஐயப்ப பக்தர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களையும் கொண்டு சென்றனர்.
இருமுடி - உணவுப் பொருட்கள்
உணவு சமைப்பதற்கான அரிசி எண்ணெயுடன் கலந்து விடாமல் தனியாகப் பிரித்து வைத்தும் உணவு சமைப்பதற்கான எண்ணெய் அரிசியுடன் கலந்து விடாமல் இருப்பதற்காக தேங்காயின் கண்களில் சிறு துளை போட்டு அதில் எண்ணையை ஊற்றிய பிறகு தேங்காயின் கண்களில் உள்ள துளையை சிறு மூடும் பொருள் மூலம் மூடி சமைப்பதற்கு கொண்டு சென்றனர்.
அதனுடன் படுத்துக் கொள்வதற்குத் தேவையான விரிப்புகள் ,போர்த்திக் கொள்வதற்குத் தேவையான துணிகள் , வழிப்பயணத்திற்குத் தேவையான பொருட்களையும் கொண்டு செல்வதற்கான முறைகளும் இருந்தது


இருமுடி - நிறங்கள்
பண்டைக் காலங்களில் இருமுடி சுமந்து முதன் முறையாக செல்லும் ஐயப்ப பக்தர்கள் அதாவது கன்னி ஐயப்பன்மார்கள் சிவப்பு நிறத்திலான இருமுடியைச் சுமந்து சென்றனர் .அவர்களைத் தவிர்த்து மற்ற ஐயப்பமார்கள் வெள்ளை நிறத்திலான இருமுடியைச் சுமந்து சென்றனர் .
ஐயப்ப பக்தர்களுக்கிடையே உள்ள வேறுபாட்டை மக்கள் எளிதாக உணர்ந்து கொள்ளும் வகையில் இந்த நிற வேறுபாடு உருவாக்கப் பட்டிருந்தது.
தற்காலத்தில் இருமுடியின் இரு அறைகளிலும் இறைவனுக்கு உரிய அதாவது ஐயப்பனுக்கு உரிய வழிபாட்டுப் பொருட்கள் மட்டுமே நிரப்பப் பட்டு கொண்டு செல்லப் படுகிறது.


இருமுடி - வழிபாட்டுப்பொருட்கள்
இருமுடியில் வைக்கப்பட வேண்டிய வழி பாட்டுப் பொருட்கள் ....
2 தேங்காய்கள் அல்லது 3 தேங்காய்கள் எடுத்துக் கொள்ளப் படுகிறது அதில் ஒரு தேங்காய் நெய் நிரப்பப் பட்டும் மற்ற இரண்டு தேங்காய்கள் வழிபாட்டிற்காகவும் எடுத்துக் கொள்ளப் படுகிறது.
நெய் நிரப்பப் பட்ட தேங்காய் ஐயப்பனின் அபிஷேகத்திற்காகவும் மற்ற இரண்டு தேங்காய்கள் விடலை விடுவதற்காகவும் எடுத்துக் கொள்ளப் படுகிறது . சிலர் விடலை விடுவதற்காக 3 அல்லது 4 தேங்காய்களையும் கொண்டு செல்கின்றனர்.
காணிக்கை செலுத்துவதற்கு நாணயம் ;
முந்திரி ,சுக்கு, ஏலக்காய் ,பேரீச்சம்பழம் ,சிறிய பாட்டிலில் அடைக்கப்பட்ட தேன் ,மஞ்சள் பொடி ,குங்குமம், திருநீறு ,சந்தனம், சாம்பிராணி ,கற்பூரம் ,அகர்பத்தி ,பன்னீர் , எலுமிச்சை ,
காணிக்கை செலுத்துவதற்கு அரசியும் பருப்பும்;
வெற்றிலை பாக்கு ,அவல்பொரி ,கற்கண்டு ,உலர் திராட்சை , கதலிப் பழம் ,வறுத்த அரிசிப்பொடி ,நல்லமிளகு ஆகியவைகளில் எவை தேவைப் படுகிறதோ அவை நிரப்பப் பட்டும் ,எவை தேவை இல்லையோ அவை நீக்கப் பட்டும் வழிபாட்டுப் பொருட்கள் இருமுடியில் நிரப்பப் படுகிறது
இருமுடியில் முன்னால் உள்ள அறையில் ஐயப்ப பக்தர்கள் இரு கைகளாலும் அரிசியை எடுத்துக் கொண்டு இருமுடியின் முதல் அறையில் இடுகின்றனர் இதைப் போல தொடர்ந்து மூன்று முறை இடப்படுகிறது
ஐயப்ப பக்தர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்களும் அரிசியை இடும் முறையும் உள்ளது
அரிசியின் மேல் நெய் நிரப்பப்பட்ட தேங்காய் இருமுடியின் முன்னால் உள்ள அறையில் வைக்கப் படுகிறது
அரிசியின் மேல் நாணயங்களும் இடப்படுகிறது. கற்பூரம் ,திருநீறு ,சந்தனம், பன்னீர் ஆகியவை இருமுடியின் முன்னால் உள்ள அறையில் வைக்கப் படுகிறது

இருமுடியில் பின்னால் உள்ள அறையில், இரண்டு விடலைத் தேங்காய்கள் இருமுடியின் பின்னால் உள்ள அறையில் வைக்கப்படுகிறது .முதல் தேங்காய் 18 படி ஏறுவதற்கு முன்பு உடைத்து வலது காலை வைத்து 18 படியில் ஏறிச் செல்வதற்காக வைக்கப் படுகிறது ;இரண்டாவது தேங்காய் கோயிலை விட்டு வெளியே வந்த பிறகு உடைப்பதற்காக வைக்கப் படுகிறது.
குங்குமம், மஞ்சள் பொடி ஆகியவை இருமுடியின் பின்னால் உள்ள அறையில் வைக்கப்படுகிறது.
ஒரு முறை இருமுடியை தூக்கி தலையில் வைத்து விட்டால் எக்காரணத்தைக் கொண்டும் கீழே வைக்கக் கூடாது .கீழே வைப்பதாக இருந்தால் துணியை அல்லது போர்வையை விரித்து அதன் மேல் தான் வைக்க வேண்டும்.



Leave a Comment