எந்த பிரச்சினைக்கு எந்த கோயில் போகலாம்..?


நீங்கள் எப்போது கும்ப கோணம் சென்றாலும், இந்த மிக முக்கியமான , கும்பகோணம் நகரைச் சுற்றியுள்ள ஸ்தலங்களை தரிசித்து வாருங்கள். ரத்தினச் சுருக்கமாக , இந்த ஆலயங்களுக்கு சென்று வருவதால் ஏற்படும் முக்கிய பலன்களை கொடுத்துள்ளேன்.

சங்கடங்கள் தீர்க்கும் திருபுவனம் சூலினி,பிரத்தியங்கரா சமேத சரபேஸ்வரர்:

கடன் தொல்லைகளில் இருந்து விடுபட,வழக்குகளில் வெற்றியடைய, பில்லி,சூனியம், ஏவல்களில் இருந்து விடுபட பரமேஸ்வரன், சரபேஸ்வரராய் வீற்றிருந்து அருள்பாளிக்கும் " திருபுவனம் " சென்று வழி படலாம். இவர் வழிபடுபவரின் அனைத்து சங்கடங்களையும் தீர்ப்பவர். சூலினி,பிரத்தியங்கரா என தன் இரு தேவியருடன் தனி சந்நதி கொண்டு வீற்றிருக்கும் சரபரை 11 விளக்குகள் ஏற்றி, 11 முறை சுற்றி வந்து, 11வாரங்கள் வழிபட சங்கடங்கள் அனைத்தும்தீர்ந்து சுக வாழ்வு கிடைக்கும். சரபரை வழிபட ஞாயிற்று கிழமை ராகு கால வேளை சிறந்தது.

அட்சரப்பிரயாசம் ( எழுத்தறிவு ) பெற இன்னம்பூர் எழுத்தறிநாதர்:

அகத்திய முனிவர் இத் தலம் வந்து எழுத்தறிநாதரை வழிபட்டு இலக்கணங்களை கற்றுக் கொண்டதால், இன்றளவும் இத் தலத்தில் சிறு பிள்ளைகளுக்கான அட்சரப்பியாசம் நடைபெறுகிறது.
குழந்தைகளை பெற்றவர் இத் தலம் அழைத்து வந்து இங்குள்ள நாதனின் முன்பாக எழுத்து பயிற்சி தருகின்றனர்.இத் தல நடராஜரின் விக்கிரகத்தில் இடப் பக்கம் கங்கா தேவியும், வலப் பக்கம் நாகமும் காட்சியளிப்பது அற்புதமான காட்சி. இத் தலம் சஷ்டியப்தபூர்த்தி, பீம ரத சாந்தி ஹோமங்கள் செய்ய மிகச் சிறந்தது.

தடைபட்ட திருமணம் நடக்க கோனேரிராஜபுரம் என்றழைக்கப்படும் திருநல்லம் :

முக்கண்ணன் " உமா மகேஸ்வரராய் "மேற்கு நோக்கி வீற்றிருக்க, " அங்கவள நாயகியாய் " அம்பாள் கிழக்கு நோக்கி வீற்றிருப்பது, இருவரும் மாலை மாற்றிக் கொள்ளும் வண்ணம் அமர்ந்திருப்பதாய் ஐதீகம். பூமாதேவி, ஈஸ்வரனை பூஜிக்க வேண்டி, தேவ சிற்பி விஸ்வகர்மா ஆலயம் அமைக்க, தேவகுரு பிரகஸ்பதி மகேஸ்வரனை பிரதிஷ்டை செய்த,திருமணத் தடை அகற்றும் திருக் கோயில் இது. இத் தல நாயகனையும், அம்பாளையும் வழிபட்டால், தடைபட்ட திருமணங்கள் இனிதே நிறைவேறும். " பொல்லாத் துயரையும் பொடிப் பொடியாக்கும் இறைவன் " என இத் தல நாயகனை திருநாவுககரசர் பாடியுள்ளார். இத் தலத்தில், நோய் தீர்க்கும், " ஸ்ரீ வைத்திய நாதர் " சந்நதியும் அமைந்துள்ளது. இத் தலம்,திருவிடை மருதூரிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. கும்பகோணம் - வடமட்டம் பேருந்து வழித் தடத்தில்,
கோனேரிராஜபுரம் என்ற பஸ் நிறுத்தத்தில் இருந்து 1 கி,மீ. தொலைவில் ஆலயம் உள்ளது.

தீரா நோய்கள் தீர்க்கும் "வைத்தீஸ்வரன் கோவில் வைத்திய நாதர் :

மயிலாடுதுறை - சீர்காழி வழித் தடத்தில் அமைந்துள்ள நோய் தீர்க்கும் திருத் தலம் " வைத்தீஸ்வரன் கோவில் ". செவ்வாய் தோஷம் நீக்கும் " அங்காரகனுக்குரிய " திரு கோயிலான இது ஒரு பிரார்த்தனை திருத்தலம். வேண்டுபவரது பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேற்றும் வைத்யநாதர்,தையல் நாயகி சமேதராய் அருளும் திருக்கோயில் இது. இங்குதான் முத்துசாமி தீட்சிதர் பதிகம் பாடி கண்ணொளி பெற்றார்.18 சித்தர்களில் ஒருவரான, நோய்கள் தீர்க்கும் "தன்வந்திரி" இத் தலத்திற்கு உரியவர். அப்பர் பாடிய தேவாரத்திற்கு ஏற்ப, இத் தலத்தில் தரப்படும் மருந்து உருண்டையை உட்கொண்டு, இத் தல சித்தாமிர்த திருக்குளத்து நீரை பருகினால் தீராத வியாதிகள் அனைத்தும் தீரும் என்பது நிச்சயம். இங்குள்ள சடாயு குண்டத்தில் உள்ள சாம்பலை பூசிக் கொள்ள நோய்கள் தீருகின்றன.

செல்வம் பெற வணங்க வேண்டிய தலம் "திருவாடுதுறை":

கும்பகோணம் - மாயவரம் சாலையில் கும்பகோணத்திலிருந்து சுமர் 10 கி.மீ.தொலைவில் உள்ளது ஆடுதுறை எனப்படும் "திருவாடுதுறை".

ஞானசம்பந்தரிடம் அவர் தந்தை யாகம் செய்ய தேவையான பொருள் கேட்க, சம்பந்தரும் இத் தல இறைவன் மாசிலாமணி ஈஸ்வரரை வேண்டி பதிகம் பாட,பரம் பொருளும் 1000 பொற்காசுகள் கொண்ட பொற்கிளியை பலி பீடத்தின் மீது வைத்தருளினார்.

சரஸ்வதி கடாட்சம் தரும் கூத்தனூர்:

மாணவர்கள் கல்விச் செல்வம் பெறவும்,கலைமகளின் பரிபூரண அருளை பெறவும் வழி பட வேண்டிய தலம் ஞானசரஸ்வதி காட்சி தரும் "கூத்தனூர்".

நமது பிறப்புகள் அனைத்திலும் நம்முடன் வருவது நாம் பெற்ற கல்விச் செல்வம் மட்டுமே. மயிலாடுதுறை - திருவாரூர் வழித் தடத்தில் பேரளத்தை அடுத்து அமைந்துள்ளது ஞான சக்தியாய் மகா சரஸ்வதி அருளும் கூத்தனூர். வெண்ணிற ஆடை உடுத்தி, வெண் தாமரையில் கிழக்கு முகமாய் வீற்றிருக்கும் சரஸ்வதி தேவி ஆய கலைகள் அனைத்தையும் அருள்பவள். இவள் வாக்கு வன்மையை தருபவள். வாழ்வில் உயர அனைவரும் வழிபட வேண்டியவள். ஞானம் அருள்பவள்.



Leave a Comment