சபரிமலை நடை நாளை திறப்பு
மண்டலகால பூஜைகளுக்காக சபரிமலை நடை நாளை மாலை திறக்கப்படுகிறது.
கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் 41 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் பூஜை சபரிமலையில், 'ஒரு மண்டல காலம்' என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு, நவ. 17-ம் தேதி கார்த்திகை முதல் தேதி முதல் மண்டலகாலம் தொடங்குகிறது.
இதற்காக சபரிமலை நடை நாளை மாலை 5:00 மணிக்கு திறக்கிறது. கடந்த ஒரு ஆண்டு காலமாக சபரிமலையில் தங்கி பூஜைகள் செய்து வரும் மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடைதிறந்து தீபம் ஏற்றுவார்.அதை தொடர்ந்து கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் ஒரு ஆண்டு காலத்துக்கான மேல்சாந்திகளாக தேர்வு செய்யப்பட்டுள்ள சபரிமலை- வாசுதேவன் நம்பூதிரி, மாளிகைப்புறம் -நாராயணன் நம்பூதிரி இருமுடி கட்டு ஏந்தி கோயில் முன்புறம் வருவர். மாலை 6:30 மணிக்கு புதிய மேல்சாந்திகளுக்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு அபிஷேகம் நடத்தி, ஐயப்பன் மூலமந்திரம் சொல்லிக்கொடுத்து கோயிலுக்கு அழைத்து செல்வார். வேறு விசேஷபூஜைகள் எதுவும் நடைபெறாது.
இரவு 11:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.17-ம் தேதி அதிகாலை 3:00 மணிக்கு புதிய மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடைதிறந்ததும் இந்த ஆண்டுக்கான மண்டலகாலம் தொடங்கும். தொடர்ந்து தந்திரி கண்டரரு ராஜீவரரு ஐயப்பனுக்கு அபிஷேகம் நடத்தி பிரசாதம் வழங்கியதும், நெய்யபிஷேகம் தொடங்கும். அன்றிலிருந்து தொடர்ச்சியாக 41 நாட்களும் அதிகாலை 3:00 மணிக்கு நடை திறந்து பூஜைகள் நடைபெறும். டிச., 27-ம் தேதி மண்டலபூஜை நடைபெறும்.ஏற்பாடுகள் தயார்மண்டல காலத்தில் வரும் பக்தர்களை வரவேற்க சன்னிதானம் தயாராகி விட்டது.
பக்தர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு வசதி விரிவு படுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்கும் அறைகளையும் ஆன்லைனில் புக்கிங் செய்ய முடியும். கடந்த 15 நாட்களாக அப்பம் - அரவணை தயாரித்து ஸ்டாக் செய்யப்பட்டுள்ளது. 50 லட்சம் டின் அரவணை ஸ்டாக் செய்யப்பட்டுள்ளது. பாட்டில் குடிநீர் தடை செய்யப்பட்டுள்ளதால் ஆங்காங்கே பாதுகாக்கப்பட்ட குடிநீர் பிளான்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.
Leave a Comment