திருக்கல்யாணத்துடன் நிறைவடைந்த கந்தசஷ்டி விழா
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3ஆம் படை வீடான பழனியில் கந்த சஷ்டி விழா சண்முகர்-வள்ளி-தெய்வானை திருக்கல்யாணத்துடன் நிறைவடைந்தது.
முருகனின் அறுபடை வீடுகள் உட்பட தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் கடந்த 8ம் தேதி கந்தசஷ்டி விழா தொடங்கியது. அதன் ஒரு பகுதியாக பழனியிலும் கடந்த 8ம் தேதி காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா ஆரம்பமானது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் மலைக்கோயிலில் நேற்று மாலை விமரிசையாக நடைபெற்றது.
தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களிலிருந்தும் வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்த சூரசம்ஹார நிகழ்ச்சியில் பங்கேற்றனர். விழாவின்போது, அசுரர்களை முத்துக்குமாரசாமி வதம் செய்ததை பக்தர்கள் அரோகரா கோஷமிட்டு வணங்கி வழிப்பட்டு, சஷ்டி விரதத்தை நிறைவு செய்தனர்.
இதனையடுத்து இன்று காலை மலைக்கோவிலில் சண்முகர் -வள்ளி, தெய்வயானை ஆகியோருக்கு திருக்கல்யாண உற்சவம் வெகுசிறப்பாக நடைபெற்றது. அதில், பால் பஞ்சாமிர்தம். தேன்.பன்னீர்.இளநீர். தயிர் மற்றும் 16 வகையான வாசனைதிரவியப்பொடிகள்கொண்டு முத்துக்குமார சாமிக்கு சிறப்பு அபிசேகங்கள் செய்யப்பட்டன.
இதேபோல், திருஆவினன்குடியில் சின்னக்குமாரர்-வள்ளி, தெய்வயானைக்கும் திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் பெண்கள் உட்பட ஆயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
Leave a Comment