மலைக்கோட்டையில் 23-ந் தேதி மகா தீபம்
மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி மலை உச்சியில் வருகிற 23-ந் தேதி மகாதீபம் ஏற்றப்படுகிறது.
தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டையில் உள்ள தாயுமானசுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் மிகப்பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். ரத்தினாவதி என்ற பெண்ணுக்கு சிவபெருமான் அவள் தாய் வடிவில் வந்து சுகப்பிரசவம் செய்த தலம். ஆகையால் இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தாயுமானசுவாமி என்று அழைக்கப்படுகிறார்.
மலையின் உச்சியில் உச்சி பிள்ளையாரும், மலையின் நடு பகுதியில் தாயுமானசுவாமியும், மட்டுவார் குழலம்மையும், மலையின் கீழ் பகுதியில் மாணிக்க விநாயகரும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகின்றனர்.
இந்த கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா இந்த ஆண்டு வருகிற 23-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அன்று மாலை 6 மணி அளவில் உச்சிப்பிள்ளையார் சன்னதிக்கு முன்பாக உள்ள உயரமான கோபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பிரமாண்ட செப்புக் கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்படும். இதையொட்டி முன்னதாக செப்புக்கொப்பரையில் 300 மீட்டர் அளவுள்ள பருத்தி துணியை கொண்டு செய்த திரி வைக்கப்படும். அதில் இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய் மற்றும் நெய் ஆகியவையும் ஊற்றப்படும். செப்புக்கொப்பரையில் ஏற்றப்படும் கார்த்திகை தீப ஜோதி தொடர்ந்து 3 நாட்கள் அணையாமல் எரியக் கூடியதாகும்.
Leave a Comment