திருக்கார்த்திகை முருகபெருமான் வழிபாடு....


திருவிளக்கு வழிபாட்டை முடித்து மறுதினம் திருக்கார்த்திகையன்று வீடு முழுவதும் மெழுகி, கழுவிச் சுத்தம் செய்து முருகப்பெருமானை வரவேற்க வேண்டும்.  இல்லத்துப் பூஜையறையில் விநாயகப் பெருமான் படத்தோடு அருகில் முருகப்பெருமான் படத்தையும் வைத்து அதற்கு மாலை அணிவித்து வழிபாடு செய்து வந்தால் வாழ்க்கை வளமானதாக அமையும்.


காலையில் விரதமிருப்பது நல்லது. இரவு விரதத்தைப் பூர்த்தி செய்யலாம். கார்த்திகையன்று விரதமிருந்து முத்துக்குமரனை வழிபட்டு வந்தால் முத்தான வாழ்க்கை அமையும். பெண்களுக்கு நல்ல கணவன் அமையவும், ஆண்களுக்கு நல்ல மனைவி அமையவும் குழந்தைச்செல்வம் பெறவும், பெற்ற குழந்தைகள் கல்விச் செல்வம் பெறவும், அறிவு வளரவும் இந்த விரதம் பலன் தருகின்றது.


இந்த விரதத்தின் மூலம் தான் அருணகிரிநாதர் முருகப்பெருமானின் அருளைப் பெற்றார். இரவு வரை விரதமிருக்க முடியாதவர்கள் ஒரு நேரம் மட்டும் விரதமிருப்பதும் உகந்ததாகும். அமாவாசை விரதம் போல, கார்த்திகை விரதமன்றும் காக்கைக்கு உணவளிக்க வேண்டும். அதன் பிறகே நாம் விரதத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். பகலில் பசும்பால் மட்டும் அருந்தலாம். பழம் சாப்பிடலாம். அன்று மாலை பால், பழம், பருப்பு பாயசம் சாப்பிடலாம்.


மறுநாள் பச்சரிசி சாதம், பருப்பு, வாழைக்காய் அவியல், கூட்டு ஆகியவற்றை உட்கொள்வது நல்லது.
கந்தனுக்குப் பிடித்த கந்தரப்பம், இனிப்பு உருண்டைகளை நைவேத்தியமாக வீட்டில் வைத்து கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் போன்ற கவசங்களை பாராயணம் செய்வது நல்லது. அருகில் உள்ள சிவாலயத்திற்குச் சென்று கந்தன் சன்னிதியில் கைகூப்பித் தொழுவது நல்லது. மேலும், இழப்புகளை ஈடுசெய்யும் ஆற்றல் இந்த விரதத்திற்கு உண்டு.



Leave a Comment