புத்திர தோஷம் நீக்கி சந்தோஷத்தை நிலைக்கச் செய்யும் கந்த சஷ்டி!


முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று வெற்றி கொண்டு ஆட்கொண்டார். இந்நாளே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வு திருச்செந்தூர் தலத்தில் நடந்தது. எனவே, கந்தசஷ்டி விழா இத்தலத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

சஷ்டி விரதம் ஐப்பசி மாத தீபாவளி அமாவாசையின் பின் அதாவது வளர்பிறை பிரதமை முதல் ஆரம்பித்து, ஆறாம் நாளான சஷ்டி திதி வரையான ஆறு தினங்களும் அனுஷ்டிக்கப்படும் முருகப்பெருமானுடைய சிறப்பான நோன்பாகும். கந்தசஷ்டி விரதத்தை முறையாக அனுஷ்டிப்போர்க்கு இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய மூன்று சக்திகளுக்கும் தலைவனான முருகப்பெருமானது பேரருள் கிட்டும். சஷ்டியன்று கந்தனுக்கு அபிஷேகம் செய்த பாலைப் பருகுவோர்க்கு புத்திர பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்!.

கந்த சஷ்டி என்னும் போது அதற்கென சில விரத நியதிகள் தனித்துவம் பெற்றுத் திகழ்கின்றன. இவ்விரதம் அனுஷ்டிக்க விரும்புவோர் விரத நாட்களில் விடியற்காலை துயில் எழுந்து சந்தியாவந்தனம் முதலிய காலைக்கடன்களை முடித்து, ஆற்றில் இறங்கி நீரோட்டத்தின் எதிர்முகமாக நின்று, “ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தை உச்சரித்தபடி முருகனை மனதில் இருத்தி நீரில் மூழ்கி எழ வேண்டும்.

கிணறு, குளம் போன்ற நீர்நிலைகளில் நீராடுபவர்கள் வடதிசை நோக்கி நின்று மேற்கூறியவாறு தூய நீராடி, தோய்த்துலர்ந்த ஆடையணிந்து அமைதியான இடத்திலோ அல்லது ஆலயத்திலோ அமர்ந்து அல்லல் தீர்க்கும் ஆறுமுகப் பெருமானை நினைந்து தியானம் செய்ய வேண்டும். விரத காலங்களில் மனம் வேறு எண்ணங்களில் ஈடுபடாதிருக்க கந்தசஷ்டி கவசம், கந்தரலங்காரம், கந்தரனுபூதி, கந்தர் கலிவெண்பா திருமுருகாற்றுப்படை போன்ற நூல்களைப் படிக்க வேண்டும். முருகனாலயங்களில் இவ்விரத நாட்களில் கந்தபுராண படனம் நடைபெறும். இதைத் தவறாது கேட்டல் மிகவும் ஆன்மிக நன்மை பயக்கும்.

இந்த ஆறு நாட்களும் பூரண உபவாசம் இருப்பது அதி உத்தமம் எனக் கருதப்படுகின்றது. மிளகுகளை விழுங்கி, பழம் மட்டும் சாப்பிட்டு, தீர்த்தம் குடித்து, இளநீர் குடித்து ஒரு நேர உணவு மட்டும் உண்டு அவரவர் தேக நிலைக்கேற்ப “கந்தசஷ்டி” விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. ஆறாவது நாளான கந்தசஷ்டியன்று பூரண உபவாசம் இருத்தல் வேண்டும். விரதம் ஆரம்பமான தினத்தில் ஆலயம் சென்று சங்கல்பம் செய்து காப்புக் கட்டி விரதத்தைத் தொடங்கவேண்டும். கடும் விரதம் அனுஷ்டிக்க முடியாதவர்கள் முதல் ஐந்து நாட்களும் இரவு ஒரு பொழுது பால்பழம் அல்லது பலகாரம் உண்டு இறுதி நாள் உபவாசம் இருக்கலாம். அதுவும் முடியாவதவர்கள் முதல் ஐந்து நாட்களும் பகல் ஒரு பொழுது அன்னமும் ஆறாம் நாள் இரவு பால், பழம் அல்லது பலகாரமும் உண்டு விரதமிருக்கலாம்.

ஆறாம் நாள் சஷ்டித்திதியில், சூரசம்ஹாரம் முடிந்த அன்றிரவு முழுவதும் விழித்திருந்து முருகன் பெருமைகளையே பேசியும், வழிபட்டிருக்குமாறு பழம் நூல்கள் விதிக்கின்றன. சிவபிரானுக்குரிய சிவராத்திரியும், மஹாவிஷ்ணுக்குரிய வைகுண்ட ஏகாதசியும் போல முருகப்பெருமானுக்குரிய ஸ்கந்தசஷ்டியும் மிக விசேஷமான தினமாதலால் துயில் நீத்தல் (விழித்திருத்தல்) பொருத்தமானதே.

கந்தசஷ்டி விரத நாட்களில், ஆன்மா மும்மலங்களையும் நீக்குவதற்குரிய பக்குவமான மனதுடன் தனித்து, விழித்து, பசித்து இருக்க வேண்டும். உணவையும் உறக்கத்தையும் தவிர்த்து, தனித்திருந்து செய்யும் தவமே கந்தசஷ்டி விரதமாகும். உணர்வுகளை அடக்கி உள்ளத்தை ஒருநிலைப்படுத்தி கந்தப் பெருமானின் பெருமை பேசி இம்மைக்கும் மறுமைக்கும் சிறந்த வழியமைப்பதே இந்த விரதத்தின் பெறுபேறாக அமைகிறது.



Leave a Comment