கந்த சஷ்டி தோன்றிய கதை
படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கு தட்சன், காசிபன் என்ற இரு புதல்வர்கள் உண்டு. இவர்களுள் தட்சன், சிவனை நோக்கி தவம் புரிந்து பல வரங்களைப் பெற்று சிவபிரானுக்கே மாமனாராகியும் அகந்தை காரணமாக இறுதியில் சிவனால் உருவாக்கப்பட்ட வீரபத்திரரால் கொல்லப்பட்டான். (தட்சனே அடுத்த பிறவியில் சூரபத்மனாக பிறந்தான். தட்சனின் மகள் பார்வதி. பார்வதியின் மகன் முருகன். இதன் படி பார்த்தால் முருகனுக்கு சூரபத்மன் தாத்தா உறவு வருகிறது என்ற கருத்தும் உள்ளது.)
அடுத்து காசிபனும் கடும் தவம் புரிந்து சிவனிடம் பல வரங்களைப் பெற்றான். ஒரு நாள் அசுர குரு சுக்கிரனால் ஏவப்பட்ட மாயை எனும் பெண்ணின் அழகில் மயங்கி தான் பெற்ற தவ வலிமையை இழந்தான். இதைத் தொடர்ந்து காசிபனும் மாயை எனும் அசுரப் பெண்ணும் முதலாம் சாமத்தில் மனித உருவத்தில் இணைந்து மனிதத் தலையுடைய சூரபத்மனும், இரண்டாம் சாமத்தில் சிங்க உருவில் இருவரும் இணைந்து சிங்கமுகமுடைய சிங்கனும், மூன்றாம் சாமத்தில் யானை உருவில் இணைந்து யானை முகமுடைய தாரகனும், நான்காம் சாமத்தில் ஆட்டுருவத்தில் இணைந்து ஆட்டுத் தலையுடைய அஜமுகி எனும் அசுரப் பெண்ணும் பிறந்தனர். மாயை காரணமாகத் தோன்றிய இந்த நான்கு பேரும் ஆணவ மிகுதியால் மிதந்தனர்.
காஷ்யபர் தன் பிள்ளைகளிடம், குழந்தைகளே! வடதிசைநோக்கிச் சென்று சிவபெருமானை நோக்கித் தவம் செய்யுங்கள். வேண்டிய வரங்களைப் பெற்று வாழுங்கள்! என்று உபதேசம் செய்தார். இவர்கள் கடும் தவமிருந்து சிவபெருமானிடம் பல வரங்களைப் பெற்றனர்.
இவர்களுள் சூரபத்மன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து 108 யுகம் உயிர் வாழவும் 1008 அண்டம் அரசாளவும் இந்திர ஞாலம் எனும் தேரையும் வரமாக பெற்றான். மேலும் தனக்கு சாகாவரம் வேண்டும் என சூரபத்மன் சிவனிடம் கேட்டான். பிறந்தவன் மடிந்தே தீர வேண்டும் என்ற சிவன், எந்த வகையில் அவனுக்கு அழிவு வர வேண்டும் எனக் கேட்டார். சூரபத்மன் புத்திசாலித்தனமாக, ஒரு பெண்ணின் வயிற்றில் பிறக்காத பிள்ளையால் தான் தனக்கு அழிவு வர வேண்டும், எனக் கேட்டான். பெண்ணையன்றி வேறு யாரால் ஜீவர்களை உற்பத்தி செய்ய முடியும் என்பது அவனது கணக்கு. இந்த வரத்தைப் பெற்ற சூரபத்மனும் அவனுடன் பிறந்தவர்களும் தன் குலகுருவான சுக்ராச்சாரியரிடம் ஆசி பெற்று தம்மைப் போல் பலரை உருவாக்கி அண்டசராசரங்கள் எல்லாவற்றையும் ஆண்டு இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களையும் சிறையிலடைத்தனர். இந்திரன் சூரபத்மனுக்கு பயந்து பூலோகம் வந்து ஒளிந்து கொண்டான்.
அசுரர்களின் இந்தக் கொடுமையைத் தாங்க முடியாத தேவர்கள், கயிலாயம் சென்று சிவபெருமானிடம் சூரபத்மனிடம் இருந்து தங்களைக் காக்கும்படி முறையிட்டனர். சிவனும் அவர்களைக் காப்பாற்றும் நோக்குடன் பார்வதியின் தொடர்பின்றி, தனது ஆறு நெற்றிக் கண்களைத் திறக்க (சிவனுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம், ஞானிகளுக்கு மட்டும் தெரியக்கூடிய அதோ முகம் (மனம்) என்று ஆறுமுகங்கள் உண்டு) அவற்றிலிருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளையும் வாயு பகவான் ஏந்திச் சென்று சரவணப் பொய்கையில் மலர்ந்திருந்த தாமரை மலர்கள் மீது சேர்த்தான். அந்த தீப்பொறிகள் ஆறும் ஆறு குழந்தைகளாகத் தோன்றின! அந்த ஆறு குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் அறுவர் பாலூட்டி சீராட்டி வளர்த்தனர். இந்த ஆறு திருமுகங்களும் ஞானம், ஐஸ்வர்யம், அழகு, வீரியம், வைராக்கியம், புகழ் எனும் ஆறு குணங்களைக் குறிக்கிறது. பிரணவ சொரூபியான முருகனிடம் காக்கும் கடவுள் முகுந்தன், அழிக்கும் கடவுள் ருத்ரன், படைக்கும் கடவுள் கமலோற்பவன் ஆகிய மும்மூர்த்திகளும் அடங்குவர். மேலும் முருகப் பெருமான் சிவாக்னியில் தோன்றியவராதலால் ஆறுமுகமே சிவம்-சிவமே ஆறுமுகம் என்பதுண்டு. அந்த ஆறு குழந்தைகளையும் பார்வதி கட்டி அணைக்க… அவர்கள் ஒரு மேனியாக வடிவம் கொண்டு ஆறு முகங்களும் இரு கரங்களும் கொண்ட முருகப் பெருமானாகத் தோன்றினர். இத் திருவுருவைப் பெற்றதால் ஆறுமுகசுவாமி என்ற பெயர் முருகப் பெருமானுக்கு ஏற்பட்டது. அத்துடன் இந்த ஆறு குழந்தைகளையும் பார்வதி ஒரே குழந்தையாக ஸ்கந்தம் (சேர்த்தல்) செய்ததால் முருகன் ஸ்கந்தப்பெருமான் ஆனார். முருகன் என்றால் அழகன். கோடி மன்மதர்களை விட அழகாக இருந்தான் அவன்.முருகப்பெருமான் தேவகுரு பிரகஸ்பதி மூலம் அசுரர்களின் வரலாற்றினை அறிந்தார். திருக்கரத்தில் வேலேந்திக் கொண்டு முருகப்பெருமான், இந்திராதி தேவர்களே! நீங்கள் அசுரர்களுக்குச் சிறிதும் அஞ்சத்தேவையில்லை. அஞ்சும் முகம் தோன்றும் போது இந்த ஆறுமுகத்தை எண்ணுங்கள். உங்கள் குறைகளை சீக்கிரமே போக்கி அருள்செய்வது என் வேலை, என்றார். அசுரர்களை அழிக்க நினைத்த முருகன் முதலில் சிங்கமுகன், தாரகாசுரன், அவன் மகன் என எல்லா சேனைகளையும் ஐந்து நாட்களில் அழித்தார். ஆறாம் நாள் எஞ்சியவன் சூரபத்மன்தான்.
தனது சேனைத்தலைவரான வீரபாகுவை சூரபத்மனிடம் தூது அனுப்பி அவனைத் திருந்தும்படி எச்சரித்தார். ஆனால், சூரபத்மன், பாலகன் முருகனா எனக்கு எதிரி! யார் வந்தாலும் இந்திராதி தேவர்களைக் காக்க யாராலும் முடியாது, என்று வீராவேசமாகக் கூறினான். உடனே பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் முருகப் பெருமானை சூரனுடன் போர் புரிய அனுப்பினர். சூரனோ, கடலின் நடுவில் வீரமகேந்திரபுரி என்ற பட்டணத்தை எழுப்பி அங்கே வசித்து வந்தான். அங்கே செல்வது அவ்வளவு எளிதல்ல. ஆனால், உலகாள வந்த முருகனுக்கு இது சாதாரண விஷயம். அவர் அந்த நகரை அடைந்தார். சூரன் அவரைப் பார்த்து ஏளனம் செய்தான். ஏ சிறுவனே! நீயா என்னைக் கொல்ல வந்தாய். பச்சை பிள்ளையப்பா நீ! உன்னைப் பார்த்தாலே பரிதாபமாக இருக்கிறது. பாலகா! இங்கே நிற்காதே, ஓடி விடு, என்று பரிகாசம் செய்தான். முருகன் அசரவில்லை.
தன் உருவத்தைப் பெரிதாக்கி அவரைப் பயமுறுத்தினான். அதன் மீது சக்தி வாய்ந்த ஏழு பாணங்களை எய்தார் முருகன். உடனே அவன் மகாசமுத்திரமாக உருமாறினான். மிகப்பெரிய அலைகளுடன் முருகனைப் பயமுறுத்திப் பார்த்தான். உடனே நூறு அக்னி அம்புகளை கடல் மீது ஏவினார் முருகன். கடல் பயந்து பின் வாங்கியது. இருப்பினும், முருகனைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் சூரனுக்கு வரவில்லை. காரணம், ஒரு சிறுவனைக் கொல்வது தன் வீரத்துக்கு இழுக்கு என்றும், அது பாவமென்றும் அவன் கருதினான். அந்தக் கல்லுக்குள்ளும் இருந்த ஈரத்தைக் கண்டு தான், கருணாமூர்த்தியான முருகனும் அவனைக் கொல்லாமல் ஆட்கொள்ள முடிவெடுத்தார். தன் விஸ்வரூபத்தை அவனுக்குக் காட்டினார். அதைப் பார்த்தவுடனேயே சூரனின் ஆணவம் மறைந்து ஞானம் பிறந்தது. முருகா! என் ஆணவம் மறைந்தது. தெய்வமான உன் கையால் மடிவதை நான் பாக்கியமாகக் கருதுகிறேன். உன்னை பயமுறுத்த கடலாய் மாறினேன். அந்தக் கடலின் வடிவாகவே நான் இங்கு தங்குகிறேன். உன்னை வணங்க வரும் பக்தர்கள் என்னில் நீராடியதுமே, ஆணவம் நீங்கி, உன் திருவடியே கதி என சரணமடையும் புத்தியைப் பெற வேண்டும், என்றான். முருகனும் அந்த வரத்தை அவனுக்கு அளித்தார். அதன் பிறகு, தன் ரூபத்தை சுருக்கி, சூரனுக்கு ஞாபகமறதியை உண்டாக்கினார். சூரனுக்கு ஆணவம் தலை தூக்கவே அவன் மாமரமாக மாறி அவரிடமிருந்து தப்ப முயன்றான்.
முருகப்பெருமான் தன் தாய் உமாதேவியிடம் ஆசிபெற்று வாங்கிய வேலாயுதத்தை மாமரத்தின் மீது விடுத்தார். (நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் தலத்தில்தான் முருகப் பெருமான் தன் தாயிடம் வேலைப் பெற்றார். சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சூரசம்ஹாரம் என்பர். சஷ்டியின் ஐந்தாம் நாள் விழாவன்று, வேல் வாங்கும் உற்சவ முருகனுக்கு முகமெங்கும் வியர்வைத் துளிகள் அரும்பும் அதிசயத்தை ஆண்டுதோறும் காணலாம்.)வேல் பட்டதும் மாமரம் இரண்டாகப் பிளந்தது. அதன் ஒருபாதியை மயிலாகவும், மறுபாதியை சேவலாகவும் மாற்றிய முருகன் தனது வாகனமாகவும், கொடிச்சின்னமாகவும் ஆக்கினார். சூரன் மாமரமான இடம் மாம்பாடு எனப்படுகிறது. இன்றும் இங்கு மாமரம் தழைப்பதில்லை. பகைவனுக்கும் அருளும்பரமகாருண்ய மூர்த்தி யான அவர், சூரனை வதம் செய்யாமல் அவனை ஆட்கொண்டார். இச்செயலால்வைதாரையும் வாழவைப்பவன் என்ற சிறப்புப் பெயர் பெற்றார். சூரசம்ஹாரம் முடிந்தபின் முருகன் சிவபூஜை செய்ய விரும்பினான். அதற்காகக் கடற்கரையில் கட்டப்பட்ட கோவில்தான் திருச் செந்தூர் கோவில். இங்கு மூல ஸ்தானத்தின் பின்பகுதியில் முருகன் பூஜை செய்த சிவலிங்கத்தைக் காணலாம். சூரசம்ஹாரத்தோடு விழா முடிவதில்லை. தேவர்களுக்கு முருகன் செய்த உதவிக்கு கைம் மாறாக, இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்கு மணம் முடித்து வைத்தான். எனவே மறுநாள் முருகன்- தெய்வானை திருமண வைபவத்தோடுதான் விழா நிறைவு பெறுகிறது.
கிருத்திகை என்றால் திருத்தணி. (இங்கு மட்டும் சூரசம்ஹார விழா நடைபெறாது). தைப்பூசம் என்றால் பழனி. கந்தசஷ்டி என்றால் திருச்செந்தூர். வேல் என்றால் கொல்லும் ஆயுதமல்ல. அது ஆணவத்தை அழித்து நற்கதி தரும் பரமானந்தமான வழிபாட்டுப் பொருள். அதனால் தான், வேல் வேல் வெற்றி வேல் என்று முழங்குகிறார்கள் பக்தர்கள். அந்த வேல் பிறவித்துன்பத்தை அழித்து, முருகனின் திருவடியில் நிரந்தரமாக வசிக்கும் முக்தி இன்பத்தைத் தரக்கூடியது. சூரசம்ஹாரம் கந்தனால் ஐப்பசி சஷ்டி திதியில் நிகழ்த்தப்பட்டதால் இது கந்தசஷ்டி ஆயிற்று. முருகப் பெருமான் அசுரர்களான சூரபத்மன் மற்றும் அவனது தம்பியரை அழிக்கப் போர் புரிந்த திருவிளையாடலையே நாம் கந்த சஷ்டி விழாவாகக் கொண்டாடி மகிழ்கிறோம். கந்தசஷ்டி திருநாளில் சக்திவேலுடன் கூடிய முருகப்பெருமானை வணங்கி நற்கதி பெறுவோம்.
Leave a Comment