திருத்தணி முருகன் கோயிலில் நவ. 8 கந்த சஷ்டி விழா தொடக்கம்
அறுபடை வீடுகளில் 5-ஆம் படைவீடாகத் திகழும் திருத்தணி முருகன் கோயிலுக்கு, தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் மூலவரை தரிசித்துச் செல்கின்றனர். இந்நிலையில், வரும் நவம்பர் 8 கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கி, 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
விழாவில் தினமும் காலை 11 மணிக்கு கோயில் காவடி மண்டபத்தில் லட்சார்ச்சனை, சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நாளான 13-ஆம் தேதி மாலை 5 மணிக்கு புஷ்பாஞ்சலியும், 14 -ஆம் தேதி காலை 11 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது.
அதேபோல் திருத்தணி முருகன் கோயிலின் உபகோயிலான நந்தி ஆற்றின் கரையோரம் உள்ள கோட்டா ஆறுமுக சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா, வரும் 8-ஆம் தேதி தொடங்குகிறது. அன்று காலை 8 மணிக்கு மூலவருக்கு புஷ்ப அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது.
தொடர்ந்து, 9-ஆம் தேதி பட்டு, 10-ஆம் தேதி தங்கக் கவசம், 11-ஆம் தேதி பச்சைபட்டு, 12-இல் வெண்பட்டு, 13-இல் தங்கக் கவசம் என தினமும் காலை 8 மணிக்கு மூலவருக்கு அலங்காரம் செய்து, தீபாராதனை நடத்தப்படுகிறது.
Leave a Comment