ஸ்ரீராமரின் விரதத்துக்கு வந்த சோதனை!


சீதையை இரண்டாவது முறையாக பிரிந்து மன துயரத்தில் ஆழ்ந்து போயிருந்தார் ராமர். அவரது மனம் முழுவதும் மனைவியைப் பிரிந்த துக்கம் அடைபட்டுக் கிடந்தாலும், சீதையைப் பற்றியேஅவர் எப்போதும் சிந்தித்துக் கொண்டிருந்தாலும் ராமரின் முகம் வாட்டத்தை வெளிக்காட்டியதில்லை.

அவரது நல்லாட்சியில் நாடு செழித்து, மக்கள் துன்பத்தை மறந்திருந்தனர். ராமரின் மனதில் மட்டும் துயரம் மறையாத வடுவாய் குடிகொண்டிருந்தது. சலவை தொழிலாளி ஒருவனின் தகாத பேச்சு காரணமாக சீதையை வனத்திற்கு அனுப்பி விட்டதால், ராமரின் மனம் மட்டுமே நிம்மதியின்றி தவித்து வந்தது.

ஆனால் அவரது பண்புகளும்,பரிவுகாட்டும் உயர்ந்த குணமும்,இணையில்லா வீரமும், செறிந்த அறிவும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது. ஒரு முறை ராமரைப் பார்ப்பதற்காக நடனக் கலையில் சிறந்த பெண் ஒருத்தி வந்திருந்தாள்.

அவள் தன் நடனத்தை அரசவையில் அரங்கேற்ற அனுமதி தரும்படி ராமரிடம் கேட்டாள்.எவர் கேட்டும் இல்லை என்று சொல்லாத ராமபிரானும், அந்த நடனப் பெண்,அவையில் நடனம்புரிய அனுமதி வழங்கினார்.

அந்தப் பெண்ணும் தான் கற்ற கலையின் திறமையை கிடைத்த சிறந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டாள். அவளது நடனம் அனைவரும் மெச்சும்படியாக இருந்தது. இளமை ததும்பும் அழகும், கண்களாலும், கைகளாலும் காட்டும் அபிநயமும் நடனத்திற்கு மெருகூட்டும் விதமாக அமைந்தது.

கலைக்கு அதிபதியானகடவுளே நேரில் வந்து நடனம் புரிவது போல் இருந்தது அந்தப் பெண்ணின் நடனம். அவையில் கூடியிருந்த அனைவரும் நடனத்தை மெய்மறந்து ரசித்தனர். மன துயரத்துடன் இருக்கும் ராமருக்கும் அந்த நடனம் இனிமையூட்டியது. நடனம் முடிந்ததும் அவையில் எழுந்த கரவொலி பிரம்மாண்ட சத்தத்தை உண்டாக்கியது.

அந்தப் பெண்ணுக்கு விலை உயர்ந்த பொன் ஆபரணங்களை பரிசாக வழங்கினார் ராமர். ஆனால் அதனைப் பெற்றுக்கொள்ள நடனப்பெண் மறுத்தாள். அவையோரும், ஏன் ராமரும் கூட இதைக் கண்டு வியக்கவே செய்தனர். பொன் பிடிக்காத பெண் உலகில் உண்டா என்ன!. 'நடனத்தால் என்னையும் அவையோரையும் மகிழச்செய்த பெண்ணே!

இந்தபரிசுவேண்டாமா? அல்லது போதாதா? வேறு வேண்டுமாலும் நீ கேட்டுப் பெற்றுக்கொள்!' என்றார் ராமர். அதற்கு அந்தப் பெண், 'அரசே! நான் என்ன கேட்டாலும் தருவீர்களா?' என்றாள். 'கேட்பவர்களுக்கு இல்லை என்று என் நாடு என்றும் சொன்னதில்லை.

எனவே கூச்சம் எதுவும் தேவையில்லை. தாராளமாக, நீ எதை வேண்டுமானாலும் கேள், தருகிறேன்' என்று கூறினார் ராமபிரான். 'அரசே! நீங்கள் சிறந்த வள்ளல் தன்மை கொண்டவர் என்பதை அறிந்துதான் நான் இங்கு வந்தேன்.

உங்களைப் போன்ற அழகும், அறிவும், அன்பும், பரிவும், வீரமும், வெற்றியும் நிறைந்த ஒரு மகனை எனக்கு தாங்கள் தந்தருள வேண்டும்!' என்றாள் நடனப்பெண். அவையினர் அதிர்ச்சி அடைந்து மறுகணம் சிந்தனையில் ஆழ்ந்தனர். 'சீதையைத் தவிர மற்றொருப் பெண்ணை தன்மனதாலும் நினைத்திடாதவர் ராமர்.

இப்போது இந்தப்பெண்ணுக்கு அவரைப் போன்றதொரு மகனை கொடுக்க வேண்டுமானால் அவளை , மணந்து தானே ஆக வேண்டும். இல்லையெனில் எப்படி ஒரு மகனை பரிசாகத் தர முடியும். சிக்கலில் மாட்டி கொண்டாரே அரசர் என்று கூடியிருந்த அனைவரும் வாதிட்டுக் கொண்டனர்.

ராமரின் முகத்தில் எவ்வித சலனமும் சலனமும் இல்லை. மாற்றமும் இல்லை.அவர் முகம் தெளிந்த தெளிந்த நீரோடைப் போல், புதிதாக பூத்தமலர்போல் பொலிவுடன் காணப்பட்டது. அரியணையை விட்டு கீழே இறங்கிய ராமர், நடனப்பெண்ணின் அருகில் சென்றார். 'ஒரு மகனைப் பெற்றெடுப்பது என்றால் அதற்கு ஓராண்டாவது ஆகுமே.

அவ்வளவு தாமதம் செய்வானேன். என்னைப் போன்ற மகன்தானே வேண்டும். இங்கேயே, இப்போதே என்னையே தங்கள் மகனாக ஏற்றுக் கொள்ளுங்கள் தாயே!' என்று கூறி அவள் முன்பாக மண்டியிட்டு அமர்ந்தார் ராமபிரான். நடனப்பெண் அதிர்ந்து போனாள்.

அவள் மட்டுமா? அந்த நாடும் கூடத்தான். 'அரசே! மனைவியைத் தவிர வேறு பெண்ணை மனதாலும் நினைக்காத, உங்கள் விரதத்தை சோதிப்பதற்காகவே, இதுபோன்ற ஒரு வரத்தை நான் கேட்டேன். நீங்கள் வென்று விட்டீர்கள். நான் அறியாமையால் செய்த தவறை மன்னிக்க வேண்டும்' என்று கூறி ராமரின் கால்களில் விழுந்த நடனப்பெண், அவரிடம் விடைபெற்று திரும்பினாள்..



Leave a Comment