திருத்தணி முருகன் கோயிலில் ராஜகோபுரம்.... ஜனவரியில் கும்பாபிஷேகம்!
அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. ராஜகோபுரம் கட்டும் பணியானது, ஒன்பது நிலைகள் முடிந்து தற்போது வண்ணம் பூசும் பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன.
அறுபடை வீடுகளில், ஐந்தாம் படை வீடாக திருத்தணி முருகன் கோயில் விளங்குகிறது. இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோயிலுக்கு வந்து, மூலவரை தரிசித்துச் செல்கின்றனர். இந்நிலையில், முருகன் கோயிலுக்கு, ராஜகோபுரம் அமைக்கும் பணி, கடந்த 2009-ஆம் ஆண்டு நவம்பர் 18-இல், இந்து சமய அறநிலையத் துறையின் அனுமதியுடன் ஆரம்பிக்கப்பட்டது. இதில், 25 அடிக்கு அடித்தளம், 11 அடிக்கு கல்ஹாரம், 122 அடி உயரத்துக்கு, ஒன்பது நிலை ராஜகோபுரத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
தற்போது, ஒன்பது நிலை கோபுரங்கள் அமைக்கும் பணிகள் முடிந்து, நிலைகளுக்கு வண்ணம் பூசும் பணி நடந்து வருகிறது. இதுவரை மேற்பகுதியில் இருந்து மூன்று நிலைகளுக்கு வண்ணம் பூசும் பணிகள் முடிந்துள்ளது. மீதமுள்ள பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகிறது. இதைத் தொடர்ந்து, கோபுரம் அருகில் கல்தரை போடும் பணி மற்றும் கோபுரம் வழியாக பக்தர்கள் செல்வதற்கு படிகள் அமைக்கும் பணிக்கு டெண்டர் விடப்பட்டு 3 மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் ராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
Leave a Comment