பூலோக வைகுந்தமாக மாறிய பாண்டுரங்கன் ஆலயம்


மகாராஷ்டிர மாநிலம் புனேவில் இருந்து 40 கி.மீ. தொலைவில் ஹட்ஷி என்னுமிடத்தில் உள்ளது பாண்டுரங்கன் கோயில். இதன் சிறப்பு, ஒரு குன்றின் மீது கோயில் மனதுக்கும் கண்களுக்கும் இதமான சூழ்நிலையில் அமைந்திருப்பதுதான்.

இந்த இடம் சத்யசாய் டிரஸ்ட்டினால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கே விநாயகர், பாண்டுரங்கரின் விக்ரகங்களுடன், தியான மண்டபத்தில் ஷீரடி மற்றும் புட்டபர்த்தி பாபாவின் படங்களும் உள்ளன. குன்றின் மீதுள்ள கோயிலைச் சுற்றிலும், மலைகள் நிறைந்து மனதுக்கு இதமான அனுபவத்தைத் தருகின்றன.

புட்டபர்த்தி சாய்பாபா பக்தர் ஒருவர், மலை மேலிருந்த தன் நிலத்தில் இந்தக் கோயில், தியான மண்டபம் மற்றும் பாபா தங்குவதற்கு ஒரு மஹாலையும் கட்டினாராம். கோயிலுக்கு இரு புறமும் பசுமையான புல்வெளி, குழந்தைகள் விளையாட ஊஞ்சல், சறுக்கு மரம் என பூங்கா, தாமரை, நீலோத்பல மலர்களுடன் இரண்டு சிறிய தடாகங்கள், மரத்தாலான நாற்காலிகள் என மிகவும் சுத்தமாகவும், நேர்த்தியாகவும் பராமரித்து வருகின்றனர்.

பாபா தங்குவதற்காகக் கட்டப்பட்ட மகால், வருடத்தில் ஒரு முறை மே மாத கடைசி 10 நாட்கள் திறக்கப்பட்டிருக்கும். அந்நாளில் பாபா பக்தர்கள் பல்வேறு இடங்களிலிருந்தும் வந்து பக்திப் பாடல்களைப் பாடுகின்றனர். அப்போது மட்டும் இந்த மகாலைச் சுற்றிப் பார்க்க அனுமதியளிக்கப்படுகிறது. இங்கே பாபா தங்கியிருந்த அறையில் நுழைந்ததும் நிறைந்த மன அமைதியை உணரலாம். இந்த மகாலை பூமியில் சொர்க்கம் என்கிறார்கள். பாண்டுரங்கர் கோயில் கொண்டதால் இந்த இடம் பூலோக வைகுந்தமாகவே மாறியுள்ளது.



Leave a Comment