திருப்போரூரில் கந்தசஷ்டி விழா ஏற்பாடுகள் தீவிரம்
சென்னையை அடுத்த திருப்போரூரில் புகழ்பெற்ற கந்தசுவாமி கோயில் கந்தசஷ்டி விழா வரும் 8 ஆம் தேதி தொங்க உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது.
முருகப்பெருமான், அசுரர்களுடன் கடலில் போர் புரிந்த தலம் திருச்செந்தூர். விண்ணில் போர் புரிந்த தலம் திருப்பரங்குன்றம். மண்ணில் போர் புரிந்த தலம் திருப்போரூர் என்பது ஐதீகம். ஆண்டு தோறும் ஐப்பசி மாதத்தில் 6 நாள் கந்தசஷ்டி விழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா நவம்பர் மாதம் 8ம் தேதி காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
அன்று மாலை கிளி வாகனத்திலும், மறுநாள் நவம்பர் 9ம் தேதி ஆட்டுக்கிடா வாகனத்திலும், 10ம் தேதி சனிக்கிழமை புருஷா மிருக வாகனத்திலும் முருகப்பெருமான் வீதி உலா நடைபெறுகிறது. நான்காவது நாளான ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 11ம் தேதி காலையில் பல்லக்கு உற்சவமும் பூத வாகனத்தில் வீதி உலாவும், 12ம் தேதி திங்கட்கிழமை வெள்ளி அன்ன வாகனத்தில் வீதி உலாவும் நடைபெற உள்ளது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நவம்பர் 13ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் முருகப்பெருமான் தங்கவேல் கொண்டு சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சி நபெறுகிறது. இதைத்தொடர்ந்து இரவு தங்கமயில் வாகனத்தில் முருகப் பெருமான் வீதி உலாவும், மறுநாள் 14ம் தேதி காலை 6 மணிக்கு முருகன் திருக்கல்யாண உற்சவமும், யானை வாகனத்தில் வீதி உலாவும் நடைபெற உள்ளது. கந்தசஷ்டி விழாவையொட்டி 6 நாட்களும் லட்சார்ச்சனை நடைபெற உள்ளது. இதற்கு கட்டணமாக 300 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Leave a Comment