திருவானைக்கா கோயிலில் குடமுழுக்கு பாலாலயம்
திருவானைக்கா அருள்மிகு சம்புகேஸ்வரர் சமேத அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் குடமுழுக்குக்கான பாலாலய விழா வெகுவிமர்சையாக நடைபெற்றுள்ளது.
பஞ்சபூத திருத்தலங்களில் நீர்த்தலமான திருவானைக்கா கோயிலில் குடமுழுக்கு நடந்து 16 ஆண்டுகளுக்கு மேலானதால் பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்து சமய அறநிலையத் துறை சார்பில் சுமார் ரூ. 5 கோடியில் திருப்பணி நடத்த முடிவாகி, கடந்த ஓராண்டுக்கும் மேலாக திருப்பணிகள் நடந்தன. 95 சதவிகித திருப்பணிகள் முடிந்த நிலையில் அறநிலையத்துறை ஒப்புதலின்பேரில் 2 கட்டமாக குடமுழுக்கு நடத்த முடிவானது.
அதன்படி முதற்கட்டமாக பரிவார தேவதைகளுக்கு டிச. 9 ம் தேதியும், சுவாமி அம்மன் சன்னதிக்கு 12 தேதியும் குடமுழுக்கு நடைபெறுகிறது. முதற்கட்ட குடமுழுக்கு பாலாலய விழாவையொட்டி சனிக்கிழமை மாலை முதல்கால யாக பூஜைகள் தொடங்கி, ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை 2 ஆம் கால பூஜைகள் நடந்து பூர்ணாஹூதியுடன் நிறைவடைந்தது.
Leave a Comment