ராமேசுவரம் கோயில் தீர்த்தக் கிணறுகள் இடமாற்றம்


ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உயர்நீதிமன்ற உத்தரவின்படி 6 தீர்த்தக் கிணறுகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளன.


கோயில் தீர்த்தங்களில் புனித நீராட வரும் பக்தர்களிடம் பாரபட்சம் காட்டப்படுவதாகவும் கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களிலும் முறையாக நீராட முடியவில்லை என்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில், அனைத்து பக்தர்களும் பாரபட்சமின்றி நீராட உரிய வசதிகளை கோயில் நிர்வாகம் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.


இதையடுத்து, கூட்ட நெரிசல் அதிகம் உள்ள மகாலட்சுமி, சரஸ்வதி, சாவித்திரி, காயத்திரி, சங்கு, சக்கரம் என 6 தீர்த்தங்களை கோயிலின் வடக்கு பகுதிக்கு மாற்ற கோயில் நிர்வாகம் திட்டமிட்டது. அதன்படி ரூ. 12 லட்சத்தில் புதிதாக 6 தீர்த்தக் கிணறுகள் அமைக்கப்பட்டன. மேலும் ரூ. 18 லட்சத்தில் வழுக்காத நடைபாதையும் அமைக்கப்பட்டது.


இந்நிலையில், புதிய தீர்த்தக் கிணறுகளை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான பூஜைகள் சனிக்கிழமை தொடங்கின.
பழைய திருக்கல்யாண மண்டபத்தில் காலையில் கணபதி ஹோமம், ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

மாலையில், முதல் கால யாக சாலை பூஜை தொடங்கியது. இதில், கோயில் இணை ஆணையர் கோ.செ.மங்கையர்கரசி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர். ஞாயிற்றுகிழமை காலை இரண்டாம் கால யாக சாலை பூஜைக்கு பின்பு 6 கலசங்களில் 6 தீர்த்தங்கள் எடுத்துச் செல்லப்பட்டு, புதிதாக அமைக்கப்பட்டுள்ள 6 தீர்த்தங்களிலும் ஊற்றி தீர்த்த சமஜோஜசனம் செய்யப்பட்டது.
புனித நீராடும் பக்தர்கள் வடக்கு ராஜகோபுர வாசல் வழியாக சென்று மீண்டும் அதே வாசல் வழியாக வரும் வகையில் புதிய தீர்த்தக் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. கிழக்கு வாசல் வழியாக இனிமேல் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு மட்டுமே செல்ல முடியும்.



Leave a Comment