திருப்பதியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை
திருப்பதி திருமலையில், நவம்பர் 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தேவஸ்தானம் தடைவிதிக்க உள்ளது.
திருமலை திருப்பதிக்குத் தினம்தோறும் ஏராளமான பக்தர்கள் பல மாநிலங்களிலிருந்தும் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். அவர்களுக்காக சுவாமி தரிசனம், தங்குவதற்கு அறை வசதி, உணவு, குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி ஆகியவற்றுக்கு திருப்பதி தேவஸ்தானம் சிறப்பான முறையில் பல ஏற்பாடுகளைச் செய்து தருகிறது.
அரசு விடுமுறை நாள்கள், பிரம்மோற்சவம் போன்ற விழாக் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு கூடுகின்றனர். இதனால் அங்கு டன் கணக்கில் பிளாஸ்டிக் கழிவுகள் சேருகின்றன. அவற்றை அப்புறப்படுத்துவதிலும் சிரமங்கள் உள்ளன. மேலும் சுற்றுசூழலுக்கும் அவை தீங்கு விளைவிக்கின்றன.
எனவே, 50 மைக்ரானுக்கும் கீழ் உள்ள பிளாஸ்டிக் கவர்கள், 2 லிட்டருக்கும் குறைவான குடிநீர் பாட்டில்கள், தேனீர், காபி அருந்த பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் பூச்சு கொண்ட பேப்பர் கப்புகள் உள்ளிட்டவற்றிற்கு தடை விதிக்கப்பட்டது.
இதுகுறித்து திருமலையில் உள்ள உணவகம் மற்றும் கடை உரிமையாளர்களிடம் தேவஸ்தான அதிகாரிகள் கலந்துரையாடினர். அதில் திருமலையில் கற்கண்டு, பேரீச்சம்பழம், கடவுள் படங்கள், பைகள் உள்ளிட்டவை பிளாஸ்டிக் கவர்கள் சுற்றி விற்பனை செய்யப்படுகிறது. இனி அவற்றை தவிர்க்க வேண்டும்.
திருமலையில் உள்ள உணவகங்களிலும் தேநீர், காபி, பால் அருந்துவதற்கு பிளாஸ்டிக்கினால் ஆன கப்புகள், கவர்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்த கூடாது என்று அதிகாரிகள் அவர்களிடையே அறிவுறுத்தினர். திருமலைக்கு வரும் பக்தர்களும் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
சுற்றுசூழல் மாசுபாட்டைத் தவிர்ப்பதுடன், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும், புற்றுநோயைத் தடுக்கவும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Leave a Comment