ஐப்பசி பௌர்ணமி - சிவாலயங்களில் அன்னாபிஷேகம்


அபிஷேகப் பிரியரான சிவபெருமான், அபிஷேக நேரங்களில் பல்வேறு திரவியங்களால் திருமுழுக்காட்டு செய்விக்கப் பெறுகிறார். பின்னரும் லிங்கத் திருமேனியின் மேலே தாரா பாத்திரம் எனப்படும் செம்புப் பாத்திரத்தில் நீர் நிறைத்து, சொட்டு சொட்டாக லிங்கத் திருமேனியின்மீது அபிஷேகிக்கப்படும் தாரை அமைப்பை பல ஆலயங்களிலும் குறிப்பாக வடமாநிலங்களில் நாம் காணமுடியும்.

இந்த அபிஷேக வரிசையில், ஐப்பசி பௌர்ணமி நாளான இன்று அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் எனப்படும் சிறப்பு வழிபாடு லிங்க மூர்த்திக்கு நடத்தப்பட்டது. அனைத்து உயிர்களுக்கும் அன்னமான உணவை அளித்துப் பாதுகாக்கும் சிவபெருமானுக்கு சுத்த அன்னத்தைக் கொண்டு முழுக்காட்டப்பட்டது. இனிப்பு, காய்கறி மற்றும் பழங்களுடன் செய்யப்படும் சுத்த அன்னாபிஷேகக் காட்சி, ஆலயத்துக்கு வழிபட வரும் பக்தர்களை பரவசத்துக்கு உள்ளாக்கியது. சிவாலயங்களில் கருவறையிலுள்ள சிவபெருமானுக்கு அபிஷேக ஆராதனை முடிந்த பின்னர், சமைத்த சுத்த அன்னத்தைக் கொண்டு திருமுழுக்காட்டப்பட்டது.

லிங்கத் திருமேனி மறையுமளவுக்கு அன்னம் குவிக்கப்பட்டு, இனிப்புகள், பழங்கள் நிவேதனதுக்கு வைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. கங்கை கொண்ட சோழபுரம் ஆலயத்தில் நடைபெறும் அன்னாபிஷேகப் பெருவிழா தமிழகத்தில் நடைபெறும் ஒரு முக்கிய திருவிழா ஆகும்.

சுமார் பதின்மூன்றரை அடி உயரமும் அறுபது அடி சுற்றளவும் கொண்ட இந்த சிவலிங்கத் திருமேனிக்கு, 108 மூட்டை அரிசி அன்னமாக சமைக்கப்பட்டு அன்னா பிஷேகம் நடைபெற்றது. பின்னர் இறைவனுக்குப் படைக்கப்பட்ட அன்னம் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்பட்டது. கங்கை கொண்ட சோழபுரத்தைச் சுற்றியுள்ள கிராமங்கள் மட்டுமின்றி, தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் கூடி அன்னாபிஷேகத்தை தரிசித்து மகிழ்ந்தனர்.

இந்த அன்னாபிஷேக நாளன்று இறைவனைத் தரிசித்து பிரசாதத்தை உட்கொள்வதை பெரும் பேறாக பக்தர்கள் கருதுவதுடன், வரும்காலங்களில் வாழ்வில் பஞ்சமே இராது என்றும் நம்புகின்றனர். அத்துடன் அபிஷேக அன்னத்தை எறும்பு, கால்நடை, பறவை உள்ளிட்ட எல்லா உயிர்களுக்கும் அளிப்பர்.



Leave a Comment