புஷ்கரம் விழாவின் கதை....
புஷ்கரம் என்பது பிரம்மதேவரின் கமண்டலத்தில் இருக்கும் புனித தீர்த்தம். உலக மக்கள் நீராடிப் புண்ணியம் பெறுவதற்காக அந்தத் தீர்த்தத்தைப் பெற விரும்பினார் குருபகவான். அதற்காக பிரம்மதேவரை வேண்டி தவம் இருந்தார். குருபகவானின் தவத்துக்கு இரங்கிய பிரம்மதேவர், அவருக்கு முன்பு தோன்றி, ''என்ன வரம் வேண்டும்?'' என்று கேட்டார். குருபகவானும் 'பிரம்மதேவரின் கமண்டலத்தில் இருக்கும் புஷ்கர தீர்த்தம் வேண்டும்' என்றார்.
புஷ்கர தீர்த்தத்தை குருபகவானுக்குத் தருவதில் பிரம்மதேவருக்கு சம்மதம்தான். ஆனால், புஷ்கரமோ பிரம்மதேவரை விட்டுப் பிரிய சம்மதிக்கவில்லை. அதேநேரம் குருபகவானுக்கு ஏமாற்றம் அளிக்க விரும்பாத பிரம்மதேவர், புஷ்கரத்துக்கும் குருபகவானுக்கும் இடையில் ஓர் உடன்படிக்கை செய்துவைத்தார். அதன்படி குருபகவான் எந்த ராசிக்குச் செல்கிறாரோ அந்த ராசிக்கு உரிய நதியில் குறிப்பிட்ட காலம் புஷ்கரம் சேர்ந்திருக்கும் என்றும், அப்போது அந்த நதியில் நீராடினால் அளவற்ற புண்ணியம் கிடைக்கும் என்றும் முடிவானது.
இதுதான் புஷ்கர விழாவின் தாத்பர்யம் ஆகும். தமிழகத்தைப் பொறுத்தவரை, தொடர்ந்து இரண்டு நதிகளில் புஷ்கர விழா நடைபெறுகிறது. கடந்த ஆண்டு குருபகவான் துலாம் ராசியில் இருக்கும்போது காவிரியில், நடைபெற்றது போலவே, இந்த ஆண்டு அவர் விருச்சிக ராசிக்குச் செல்லும்போது விருச்சிக ராசிக்கு உரிய தாமிரபரணியில் புஷ்கர விழா நடைபெற இருக்கிறது.
Leave a Comment