ஜீவசமாதி அடைவதற்கு சில விதிமுறைகள் உண்டு
அவை “திருமந்திரம்” நூலில் விரிவாகப் பேசப்படுகிறது. திருமந்திரம் 7ஆம் தந்திரத்தில் ‘சமாதி கிரியை’ எனும் தலைப்பில் பல பாடல்கள் உண்டு.
அந்தமில் ஞானிதன் ஆகம் தீயினில்
வெந்திடின் நாடெலாம் வெப்புத் தீயினில்
நொந்தது நாய்நரி நுகரின் நுண்செரு
வந்து நாய் நரிக்குண வாகும் வையகமே.
மகா ஞானி அல்லது பிரம்ம வித்தை பயிலும்
ஒருவனின் உடல் மற்றவர்களைப் போல மாண்டுபோன பின் தீயிலிட்டு எரித்தோமானால், நாட்டு மக்கள் எல்லாம் வெப்பு நோயினால் பீடிக்கப்பட்டு வருந்துவர். அவ்வுடல் கவனிக்க ஆளில்லாமல் அழுகிக் கிடந்து நாய்களும், நரிகளும் அவர் உடலைக் கடித்து உண்ணுமானால் உலகில் பகை மூண்டு நாட்டு மக்கள் நாய் நரிகளுக்கு உணவாகிவிடுவர்.
எண்ணிலா ஞானி உடல் எரி தாவிடின்
அண்ணல் தன் கோயில் அழலிட்டதாம் ஒக்கும்
மண்ணில் மழை விழா, வையகம் பஞ்சமாம்
எண்ணரு மன்னர் இழப்பார் அரசே.
ஞானி ஒருவரின் உடலைத் தீயிலிட்டு எரித்தால், சிவபெருமான் கோயில் கொண்டருளும் ஆலயத்தைத் தீயிட்டழித்தற்கு ஒக்கும். அப்படிப்பட்ட நாட்டில் மழை பெய்யாது. பஞ்சம் தோன்றும், எண்ணற்கரி மன்னர்கள் முடி துறப்பர்.
புண்ணியமாம் அவர் தம்மைப் புதைப்பது
நண்ணி அனல் கோக்கில் நாட்டில் அழிவாகும்
மண்ணில் அழியில் அலங்கார பங்கமாம்
மண்ணுல கெல்லாம் மயங்கும் அனல் மண்டியே.
ஞானியின் உடலைப் புதைப்பது புண்ணிய காரியம். மாறாக அவரது உடலை தீயில் சுட்டு எரித்தால் நாட்டில் அழிவுகள் நேரும். அப்படி உடலைப் புதைக்காமல் மண்ணில் சிதைந்து போகுமாறு விட்டுவிட்டால் உலகத்தின் அழகு கெடும். உலகம் எங்கும் தீப்பிடித்து கெடும்.
அந்தமில் ஞானி அருளை அடைந்தக்கால்
அந்த உடல்தான் குகை செய் திருத்திடில்
சுந்தர மன்னரும் தொல் புவி உள்ளோரும்
அந்தமில் இன்ப அருள் பெறுவாரே.
ஞானி ஒருவர் இறையருள் பெற்று பின்னர் உடலைவிட நினைத்தால், அந்த உடம்பை குகை ஒன்றை நிறுவி, அதில் அவரை இருத்திடல் வேண்டும். அப்படி செய்தோமானால் அரசர்களும் குடிமக்களும் அளவற்ற இன்பத்தை அடைவார்கள். இறைவன் அருள் அவர்களுக்குக் கிட்டும்.
நவமிகு சாணாலே நல்லாழஞ் செய்து
குவைமிகு சூழ வைஞ் சாணாகக் கோட்டித்து
அவமிகு குகை முக்கோணமுச் சாணாக்கிப்
பவமறு நற்குகை பத்மாசனமே.
குகை என்பது தரையில் தோண்டப்படும் குழி. அது எப்படி இருக்க வேண்டும்? ஒன்பது சாண் அளவுக்குக் குறையாமல் ஆழம் இருக்க வேண்டும். அப்படி தோண்டும் மண்ணைக் குழியைச் சுற்றி ஐந்து சாணுக்கு அப்பால் வளைத்துக் கொட்டி, அந்தக் குழியை குகைபோன்ற குழியில் அவரது உடலை பத்மாசனமாக உட்கார வைத்திட வேண்டும். அந்த குகைபோன்ற குழி எங்கு அமைக்கப்பட வேண்டும்?
தன்மனை சாலை குளங்கரை ஆற்றிடை
நன்மலர்ச் சோலை நகரினற் பூமி
உன்னரும் கானம் உயர்ந்த மலைச்சாரல்
இந்நிலந் தான் குகைக்கு எய்து மிடங்களே.
ஞானியின் உடலை அடக்கம் செய்யும் இடங்கள் எங்கெல்லாம் அமைக்கலாம் தெரியுமா? சமாதி ஆனவன் வீட்டின் பக்கத்தில், நடமாடும் சாலையோரத்தில், குளக்கரையில், ஆற்றின் நடுவில், பூஞ்சோலையில், நகரத்தில் நல்ல சுத்தமான பூமியில், அழகான கானகம், உயர்ந்த மலைச் சாரல் ஆகிய இடங்களே உகந்த இடங்களாம். சமாதிக்கான குகை எனும் குழி அப்படி அமைக்கப்பட வேண்டும்?
நற்குகை நால்வட்டம் பஞ்சாங்க பாதமாய்
நிற்கின்ற பாத நவபாத நேர்விழப்
பொற்பம ரோசமு மூன்றுக்கு மூன்றணி
நிற்பவர் தாம் செய்யும் நேர்மைய தாமே.
அமைக்கப்படுகின்ற குழி நான்கு புறமும் காலடியால் ஐந்து அடி அகலம், ஒன்பது அடி உயரம் இருத்தல் வேண்டும். ஞானியின் உடலை அந்தக் குழியில் சமாதி வைக்கும்போது அதில் இடப்பட வேண்டிய பொருட்கள் எவை?
பஞ்ச லோகங்கள் நவமணி பாரித்து
விஞ்சப் படுத்த தன் மேலாசனம் இட்டு
முஞ்சிப் படுத்து வெண்ணீரிட்டு அதன் மேலே
பொன்செய் நற் சுண்ணம் பொதியலுமாமே.
பொன், வெள்ளி, செம்பு, ஈயம், இரும்பு ஆகிய ஐந்து வகை உலோகங்களையும், வைரம், வைடூரியம், மாணிக்கம், மரகதம், பவழம், கோமேதகம், புஷ்பராகம், குருவிந்தம், முத்து ஆகிய நவமணிகளையும் பரப்பி வைத்து, அதன் மீது இருக்கை அமைத்து, தர்ப்பைப் புல் பரப்பி, விபூதியை நிறைய இட்டுவைக்க வேண்டும். அதன் மூது சுண்ணப் பொடியை இட்டு வைக்க வேண்டும். பிறகு?
நள்குகை நால்வட்டம் படுத்ததன் மேற்சாரக்
கள்ளவிழ் தாமம் களபம் கத்தூரியும்
தெள்ளிய சாந்து புழுகு பன்னீர் சேர்த்து
ஒள்ளிய தூபம் உவந்திடுவீரே.
குழியின் அடியில் நடுவாக சதுரமாகச் செய்து அதன் மீது தேனொழுகும் மலர்கள், சந்தனம், கஸ்தூரி ஆகியவற்றுடன் தெளிவான சாந்து, புனுகு, பன்னீர் போன்றவற்றைச் சேர்த்துத் தெளிக்க வேண்டும். நல்ல பிரகாசமான தீப ஒளியைக் குழிக்குள் காட்ட வேண்டும்.
ஓதிடும் வெண்ணீற்றால் உத்தூளம் குப்பாய
மீதினில் இட்டு ஆசனத்தின் மேல் வைத்துப்
போதறு சுண்ணமும் நீறும் பொலிவித்து
மீதில் இருத்தி விரித்திடுவீரே.
உடலெங்கும் திருநீற்றால் பூசி மேலாடை போர்த்தியதுபோல செய்து, உடலை இருக்கையில் அமர்த்தி, மலர், அருகம்புல், நறுமணப் பொடி, வெண்ணீறு ஆகியவற்றை அணிவித்துக் குழியில் வைத்து நான்கு பக்கமும் மண்ணைச் சரித்து மூடிட வேண்டும். குப்பாயம் எனும் சொல்லுக்கு மேல்சட்டை என்று பொருள். எனக்கு ஒரு குப்பாயம் வாங்கினேன் என்று சொல்லிப் பழகலாமே.
ஆக ஒரு மகா ஞானியை சமாதி இடுதல் என்பது ஏதோ ஒரு குழியை வெட்டி அதில் வைத்து மூடிவிடுவது அல்ல. அந்த குழி எப்படி வெட்டப்பட வேண்டும், எங்கெங்கு அமைக்கலாம், அதில் என்னவெல்லாம் இட்டு வைக்க வேண்டும், உடலை என்னவெல்லாம் செய்து உள்ளே வைக்க வேண்டும், எப்படி மூட வேண்டும் என்பதற்கெல்லாம் விதிமுறைகள் இருப்பது திருமந்திரம் மூலம் நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது.
Leave a Comment