மைசூரு தசரா! காணக் கிடைக்காத புகைப்படங்கள்


உடையார் மன்னர்களின் மரபை நினைவூட்டும் வகையில் மைசூரு தசரா திருவிழா புதன்கிழமை தொடங்கியது.
நாடெங்கும் தசரா விழாவை கொண்டாடினாலும், மைசூரு தசராவுக்கு தனிச்சிறப்பு உண்டு. 10 நாள்கள் நடைபெறும் தசரா விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுவதால் உலகப் புகழ் பெற்ற நிகழ்வாக மைசூரு தசரா சிறப்பு பெற்றுள்ளது.


ஆண்டுதோறும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் தசராவிழா கொண்டாடப்படுவது வாடிக்கை. மைசூரு தசரா விழாவை கண்டுகளிக்க இந்தியா மட்டுமன்றி, உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து ஏராளமானோர் இந்த விழாவில் பங்கேற்கின்றனர்.


ஒன்பது நாள்கள் நவராத்திரி நோன்பிருந்து, பத்தாவது நாளில் விஜயதசமி கொண்டாடுவது தசரா என்று அழைக்கிறார்கள். தீமையை வீழ்த்தி உண்மைக்கான வெற்றியைக் கொண்டதை விஜயதசமி குறிக்கும் என்றாலும், மைசூரு நகரை ஆண்ட மகிஷாசுரன் என்ற அரக்கனை சாமுண்டீஸ்வரி அம்மன் வதம் செய்து கொன்றதன் வெற்றி விழாவாகத்தான் தசரா கொண்டாடப்படுகிறது.


கர்நாடகத்தின் பெரும்பகுதியை தங்கள் வசம் வைத்திருந்த விஜயநகர பேரரசர்கள் 15-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தசராவிழா கொண்டாடும் வழக்கத்தை சிறிய அளவில் தொடங்கியுள்ளனர். விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, இது நின்றுபோனது.
1805-ஆம் ஆண்டு முதல் தசரா காலத்தில் அரசவைக்கூட்டம் நடத்தும் வழக்கத்தை மூன்றாம் கிருஷ்ணராஜ உடையார் தொடக்கிவைத்தார். இந்தகூட்டத்தில் அரச குடும்பத்தினர், சிறப்பு அழைப்பாளர்கள், அதிகாரிகள்,பொதுமக்கள் பங்கேற்பது வழக்கம். கிருஷ்ணராஜ உடையாருக்கு பிறகு அவரது மகன் சாமராஜேந்திர உடையாரும், அவரது மகன் ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையாரும் தொடர்ந்து கடைப்பிடித்துவந்தனர்.
தற்போது அரசவை நடத்தும் மரபை மன்னர் குடும்ப வாரிசான யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார் செய்து வருகிறார். மகாநவமி நாளில் யானைகள், ஒட்டகங்கள், குதிரைகள் புடைச்சூழல் மன்னரின் மரபுவழி வாளை ஊர்வலமாக எடுத்துச்சென்று வழிபடுவது வழக்கம்.
10 நாள்களும் தன்னை மன்னராக கருதி பல்வேறு சடங்குகளில் யதுவீர் கிருஷ்ணதத்தசாமராஜ உடையார் ஈடுபடுவார். கர்நாடகத்தில் தசரா மாநில விழாவாக கொண்டாடப்படுவதால், மைசூரில் உள்ள அரண்மனை, அரசு அலுவலகங்கள், சாலைகள் அலங்காரம் செய்து அழகுசெய்யப்படுவதுவாடிக்கையாகும்.


விழாக்காலத்தில் தினமும் மாலை 7 மணி முதல் இரவு 10 மணிவரை ஒருலட்சம் விளக்குகளில் அலங்கரிக்கப்பட்டிருக்கும் அரண்மனை ஒளிவெள்ளத்தில் மின்னும். அந்தவளாகத்தில் கலாசார மற்றும் மத ரீதியான நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இசை, நடனம், கவியரங்கம், மல்யுத்தம், விளையாட்டுகள், சிறுவர் போட்டிகள், சாகசங்கள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்.
விஜயதசமி நாளன்று பாரம்பரிய தசரா ஊர்வலம் நடைபெறும். ஜம்போ சவாரி அல்லது யானைகள் ஊர்வலம் போன்ற பெயர்களால் அழைக்கப்படும் தசரா ஊர்வலத்தை காண தெருவெங்கும் மக்கள் கூட்டம் நிரம்பிவழியும். அலங்காரம் செய்யப்பட்ட யானையின் மீது வைக்கப்பட்டிருக்கும் தங்க அம்பாரியில் சாமுண்டீஸ்வரி அம்மன்வீற்றிருக்க ஊர்வலம் தொடங்கும். முக்கியவீதிகளில் உலா செல்லும் யானைகளை பின்தொடர்ந்து அலங்கார ஊர்திகள், நடனக்குழுக்கள், இசைக்குழுக்கள், யானை, ஒட்டகம் மற்றும் குதிரை பட்டாளம் அணிவகுக்கும்.



Leave a Comment