திருப்பதியில் அன்ன வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி
திருப்பதி கோயில் நவராத்திரி பிரமோற்சவத்தின் 2வது நாளான நேற்று இரவு அன்ன வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று சிம்ம வாகனத்தில் வீதி உலா வருகிறார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் நடத்தப்படும் பிரமோற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றது.
இதில் இந்தாண்டு கூடுதல் சிறப்பாக இரண்டு பிரமோற்சவம் நடத்தப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த மாதம் 13ம் தேதி முதல் 21ம் தேதி வரை வருடாந்திர பிரமோற்சவம் நடந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு பெரிய சேஷ வாகன உற்சவத்துடன் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் நவராத்திரி பிரமோற்சவம் கோலாகலமாக தொடங்கியது.
2வது நாளான நேற்று காலை 5 தலைகளுடன் கூடிய சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி கிருஷ்ணர் அலங்காரத்தில் எழுந்தருளி யானை, குதிரை, காளை மாடு அணிவகுத்து செல்ல, மேளதாளம் முழங்க நான்குமாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று பக்தி முழக்கமிட்டும் கற்பூர ஆரத்தி எடுத்தும் சுவாமி தரிசனம் செய்தனர். வீதி உலாவில், பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்கள் சுவாமி வேடமணிந்தும், கோலாட்டம் ஆடியபடியும், பஜனை பாடல்கள் பாடியும் வந்தனர்.
மேலும், வீதி உலாவில் சின்ன ஜீயர், பெரிய ஜீயர் தலைமையில் சீடர்கள் நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடியபடி வந்தனர். தொடர்ந்து, இரவு அன்ன வாகனத்தில் சரஸ்வதி தேவி அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளினார். பிரமோற்சவத்தையொட்டி ஏழுமலையான் கோயிலில் வருகிற 18ம் தேதி வரை அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Leave a Comment