குரு பெயர்ச்சி.... திட்டை கோயிலில் சிறப்பு ஏற்பாடு
குருபகவான் நாளை துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம்பெயர்வதால், பக்தர்களின் தரிசனத்துக்கு திட்டை கோயில் நிர்வாகம் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
குரு பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு வியாழக்கிழமை இரவு 10.05 மணிக்கு பெயர்ச்சி அடைகிறார். இதையொட்டி, திட்டையில் உள்ள வசிஷ்டேசுவரர் கோயிலில் வியாழக்கிழமை காலை முதல் வசிஷ்டேசுவரர்-சுகந்தகுந்தளாம்பிகைக்குச் சிறப்பு பூஜைகள், வழிபாடு, குரு பகவானுக்கு சிறப்பு ஆராதனைநடைபெறவுள்ளது.
இக்கோயிலில் பக்தர்கள் வரிசையாகச் செல்லும் விதமாகத் தடுப்புக் கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மாவட்ட நிர்வாகம் சார்பில் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
சிறப்புப் பேருந்துகள்: குருபெயர்ச்சி விழாவையொட்டி, வியாழக்கிழமை (அக்.4) காலை முதல் வெள்ளிக்கிழமை (அக்.5) காலை வரை தஞ்சாவூர் - திட்டை, கும்பகோணம் - சூரியனார்கோவில், கும்பகோணம் - ஆலங்குடி, தஞ்சாவூர் - ஆலங்குடி ஆகிய வழித்தடங்களில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தெரிவித்தார்.
Leave a Comment