முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா நிகழ்ச்சி நிரல்


தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா அக்டோபர் 10 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் 12 நாட்கள் நடைபெறும் தசரா திருவிழா கோலாகலமாக நடைபெறும். இந்த ஆண்டும் தசரா திருவிழா வருகிற 10 ஆம் காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதனை தொடர்ந்து விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் பல திருக்கோலங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

முதலாம் நாளில் சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலத்திலும், 2-ம் நாளில் கற்பகவிருட்சம் வாகனத்தில் விசுவகர்மேசுவரர் திருக்கோலத்திலும், 3-ம் நாளில் ரிஷப வாகனத்தில் பார்வதி திருக்கோலத்திலும், 4-ம் நாளில் மயில் வாகனத்தில் பாலசுப்பிரமணியர் திருக்கோலத்திலும், 5-ம் நாளில் காமதேனு வாகனத்தில் நவநீதகிருஷ்ணர் திருக்கோலத்திலும், 6-ம் நாளில் சிம்ம வாகனத்தில் மகிஷாசுரமர்த்தினி திருக்கோலத்திலும், 7-ம் நாளில் பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்திலும், 8-ம் நாளில் கமல வாகனத்தில் கசலட்சுமி திருக்கோலத்திலும், 9-ம் நாளில் அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலத்திலும் அம்மன் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

10-ம் நாளான 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 12 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நடக்கிறது. 11-ம் நாளான 20-ந் தேதி (சனிக்கிழமை) அதிகாலை 1 மணிக்கு சூரசம்ஹாரம் முடிந்தவுடன் கடற்கரை மேடைக்கு அம்மன் எழுந்தருளி, அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. அதிகாலை 2 மணிக்கு அம்மன் சிதம்பரேசுவரர் கோவிலுக்கு எழுந்தருளி, சாந்தாபிஷேக ஆராதனைகள் நடக்கிறது.

அதிகாலை 3 மணிக்கு அம்மன் தேரில் பவனி வருதல், அதிகாலை 5 மணிக்கு சுண்டங்கோட்டை சவுந்திரபாண்டிய நாடார்-தங்கக்கனி அம்மாள் கலையரங்கத்திற்கு அம்மன் எழுந்தருளி, அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. காலை 6 மணிக்கு பூஞ்சப்பரத்தில் அம்பிகை வீதி உலா புறப்படுதல், மாலை 4 மணிக்கு அம்மன் கோவில் வந்து சேர்தல், மாலை 4.30 மணிக்கு காப்பு களைதல், இரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடக்கிறது.

12-ம் நாளான 21-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணி, 8 மணி, 10 மணிக்கு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு பாலாபிஷேகத்துடன் தசரா திருவிழா நிறைவு பெறுகிறது.



Leave a Comment