புரட்டாசி விரதத்தின் சிறப்புகள்....


ஒவ்வொரு நாளும் ஏன் ஒவ்வொரு நொடியும் இறைவனை வழிபட ஏற்றது என்றாலும், புரட்டாசி மாதத்துக்கு என்று ஒரு தனிச்சிறப்பு உண்டு. வருடம் முழுக்க சனிக்கிழமைகளில் விரதம் இருக்கத் தவறியவர்கள் கூட, புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்தால், ஆண்டு முழுவதும் விரதம் இருந்த பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.


புதனின் அதி தேவதையாக இருப்பவர் மகாவிஷ்ணு. எனவே விஷ்ணுவின் அருள் பெற உதவும் மாதமாக புரட்டாசி திகழ்கிறது. சனி பகவான் அவதரித்த்தும் இந்த புரட்டாசி மாதத்தில் தான். எனவே இந்த புரட்டாசி மாதத்தில் விஷ்ணுவை வழிபட்டால், சனி பகவானின் உக்கிரம் தணிந்து, பெருமாளின் கடாட்சம் பெருகுகிறது.


புரட்டாசி சனிக்கிழமைகளில் அனைத்து பெருமாள் கோவில்களிலும், சிறப்பு வழிபாடு நடைபெறும். 108 திவ்விய தேசங்களும் விழாக்கோலம் பூண்டிருக்கும். பெருமாளின் முக்கியத் தலங்களில், பிரம்மோற்சவம் நடைபெறும். சிலர் தங்கள் குலதெய்வ வழிபாடுகளையும், புரட்டாசியில் செய்வர்.


வீடுகளில் விரதம் இருப்பவர்கள், காலையில் எழுந்து நீராடி, பூஜை அறையில், வெங்கடாசலபதி உருவப்படம் வைத்து, விளக்கை ஏற்றி, வழிபட வேண்டும், துளசியால் அர்ச்சனை செய்ய வேண்டும். பால், பழம், கற்கண்டு, பொங்கல் ஆகியவற்றை நிவேதனம் செய்து, வணங்க வேண்டும். “ஓம் நமோ நாராயணாய” என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். ஒரு வேளை மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும். இதே போல் மாலையிலும் வழிபட வேண்டும். இதுவே புரட்டாசி விரதம் எனப்படும்.


நவராத்திரி விரதம்

நவராத்திரி மனிதனின் தேவைகளான கல்வி, செல்வம், வீரம் ஆகியவற்றை வேண்டி அவற்றின் சக்திகளான, சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை போன்றோரை வழிபட வேண்டும். மூன்று நாட்கள் வீரத்தை வேண்டி பராசக்தியையும், அடுத்த மூன்று நாட்கள் செல்வத்தை வேண்டி மகாலட்சுமியையும் கடைசி மூன்று நாட்கள் கல்வியை வேண்டி சரஸ்வதியையும் வணங்க வேண்டும். நவராத்திரியில், துர்க்காதேவி மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் புரிந்து, ஒன்பதாம் நாள் நவமியில் அவனை வதம் செய்தாள் என்றும், அதற்கடுத்த நாள் தசமியில், தேவர்கள் பூஜை செய்து வணங்கியதால், அது விஜயதசமி எனவாயிற்று என்பது உண்டு.


விரத முறை


நவராத்திரி விரதத்துக்குத் தேவையான பொருள்களை அமாவாசையன்றே சேகரித்துக் கொண்டு, அன்று முதல், ஒரு வேளை உணவு உட்கொண்டு, பிரதமையில் பூஜையைத் தொடங்க வேண்டும். நவமி வரை பூஜையைத் தொடர வேண்டும். வீடுகளிலும், ஆலயங்களிலும் கொலு வைத்தல் வேண்டும். அமாவாசையில் ஒரு வேளை உணவு உண்டு, பிரதமை முதல் எட்டு நாள்கள் பகல் உணவின்றி, இரவு மட்டும், பூஜை முடிந்தவுடன், ஒரு வேளை பால், பழம் அல்லது பலகாரம் உட்கொள்ள வேண்டும். ஒன்பதாவது நாள் மகாநவமி அன்று, பட்டினியாய் விரதம் இருந்து, விஜயதசமியன்று, காலை விரதத்தை முடிக்க வேண்டும்.

இவ்விரத நாள்களில், சுமங்கலிப் பெண்களை வீட்டுக்கு அழைத்து, மஞ்சள், குங்குமம், தாம்பூலம் ஆகியவற்றை வழங்குவர். நவராத்திரி விரதத்தைப் போன்று, எளிமையானதும், பலனளிக்கக் கூடியதும், எதுவும் இல்லை. நவராத்திரியின் சிறப்பு அம்சம் கொலு வைப்பதாகும். கொலு என்பது பல படிகளைக் கொண்ட மேடை, ஒவ்வொரு மேடையிலும், பல விதமான பொம்மைகளை நேர்த்தியாக அடுக்கி வைத்து அலங்கரிப்பதே கொலு.


இவ்விரதத்தைத் தொடர்ந்து ஒன்பது வருடங்கள் கடைப்பிடிக்க வேண்டும். நவராத்திரியில், திருமகளைத் தொடர்ந்து வழிபடுவோருக்கு, தேவி சகல சௌபாக்கியங்களையும் நல்கி, முக்தியையும் அளிப்பாள் என்பது ஐதீகம்.



Leave a Comment