திருப்பதியில் தங்கத்தேரோட்டம் கோலாகலம்


திருப்பதி பிரம்மோற்சவத்தின் 6 ஆம் நாளான இன்று தங்கத்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்ற. பக்தர்களின் கோவிந்தா கோவிந்தா கோஷத்துடன் தேரி பவனி வந்தது.

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரமோற்சவ விழா கடந்த 13-ந் தேதி தொடங்கி வெகு விமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 5-ம் நாளான நேற்று இரவு கருட சேவை மிகவும் விசே‌ஷமாக நடந்தது. கருட வாகனத்தில் கம்பீரமாக எழுந்தருளி வலம் வந்த ஏழுமலையானை மாட வீதிகளில் திரண்டு இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பிரம்மோற்சவத்தின் 6-ம் நாள் விழாவான இன்று காலை அனுமந்த வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளி மாட வீதிகளில் பவனி வந்தார். வாகன சேவையின்போது பல்வேறு கலைக் குழுவினர் ஆட்டம், பாட்டத்துடன் பக்தர்களை உற்சாகப்படுத்தினர்.

இதைத்தொடர்ந்து, இன்று மாலை தங்கத் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தங்க ரதத்தில் நாச்சியார்களுடன் ஏழுமலையான் எழுந்தருளி வலம் வந்தார்.

பிறகு, இரவு 8 மணிக்கு கஜ வாகனம் எனும் தங்க யானை வாகனத்தில் ஏழுமலையான பவனி வந்தார். பிரம்மோற்சவ விழாவில் கருட சேவையை தொடர்ந்து, தங்கத் தேரோட்டமும் மிகவும் விசே‌ஷம் என்பதால் 1 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் திருப்பதியில் குவிந்து இருந்தனர்.



Leave a Comment