நன்மை தரும் நவதிருப்பதி ஆலயங்கள்


நவ திருப்பதிகள் என்றழைக்கப்படும் 9 வைணவ சேத்திரங்களும் நவக்கிரகங்களுடன் தொடர்புடையவை எனக் கருதி வழிபட்டு வருகின்றனர். 9 திருப்பதிகளிலும் உள்ள பெருமாளையே நவக்கிரகங்களாக கருதி வழிபடுகின்றனர்.

சோழ நாட்டில் அமைந்துள்ள நவகிரக தலங்களுக்கு ஒப்பாக பாண்டிய நாடான தூத்துக்குடி மாவட்டத்தில் நவதிருப்பதி சேத்திரங்களாகப் போற்றப்படுகின்றன. நவகிரகங்களில் தலைமை பதவி வகிக்கும் சூரியன் மகா விஷ்ணுவே ஆவார்.

அவரை சூரிய நாராயணன் என்றும் கூறுகின்றனர். ஈஸ்வரப்பட்டம் பெற்ற சனி பகவானைத் தவிர மற்ற கோள்களெல்லாம் நெற்றியில் நாமம் திருமண் எனும் வைணவச் சின்னத்தை அணிந்திருப்பதிலிருந்து நவக்கிரகங்கள் வைணவத்துடன் சம்பந்தப்பட்டிருப்பதை உணர்கிறோம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதி ஆலயங்களை திருவைகுண்டம், நத்தம், திருப்புளியங்குடி, இரட்டை திருப்பதி தேவர்பிரான் இரட்டை திருப்பதி அரவிந்தலோசனார் பெருங்குளம், தென்திருப்பேரை, திருக்கோளூர், ஆழ்வார்திருநகரி ஆகிய வரிசைப்படி தரிசிக்கலாம்.

நவதிருப்பதி அனைத்தும் நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யபெற்றவை. ஒவ்வொரு கோயில்களும் தனிச்சிறப்பு மிக்கவையாகும், திருவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோயில் நவதிருப்பதிகளில் முதலாவதாகும். 108 திவ்யதேசங்களில் இது 54வது திவ்யதேசமாகும். நெல்லை-திருச்செந்தூர் சாலையில் திருவைகுண்டம் அமைந்துள்ளது. தங்கும் விடுதிகள் உள்ளன. 2வது திருப்பதியான நத்தம் விஜாசனப் பெருமாள் கோயில் 53வது திவ்யதேசமாகும்.

இங்குள்ள அருள்மிகு யோக நரசிம்மருக்கு பிரதோஷ நேரங்களில் அனைத்து வகையான திருமஞ்சனங்களுடன் நீராஞ்சன வழிபாடு, சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் கைகூடும். 3வது திருப்பதியான திருப்புளியங்குடி காசினிவேந்த பெருமாள் கோயில் 52வது திவ்யதேசமாகும். சயனத்தில் இருக்கும் பெருமாளின் நாபியிலிருந்து புறப்படும் தாமரையின் தண்டு மலரோடு இணைந்து அதன் மீது பிரம்மன் அமர்ந்திருக்கும் கோலம் சுவரில் பொறிக்கப்பட்டிருப்பது இங்கு மட்டுமே.

பிரகாரத்தில் வலம் வரும்போது பெருமாளின் தாமரைப் பாதங்களை வடக்கு வாயில் அருகே அமைந்துள்ள ஜன்னல் வழியாக தரிசிக்கலாம். 4ம் திருப்பதியான பெருங்குளம் கோயிலில் பெருமாள் மாயக்கூத்தராக அருள்புரிகிறார். பெருமாளுக்கு இணையாக ஸ்ரீதேவி, பூதேவி, நீலாதேவி, கமலதேவி என நான்கு தாயார்கள் இருப்பது தனிச்சிறப்பு. சனிதோஷம் நீங்கி வாழ்வில் நலன்கள் பெறவும், திருமணத்தடை நீங்கவும் இத்தலத்தை தரிசிப்பது சிறந்தது.

இரட்டை திருப்பதி தேவர்பிரான் திருக்கோயில் 5வது திருப்பதியாகும். இங்கு வழிபட்டால் ராகு தோஷத்தில் இருந்து விடுபடலாம். அனைத்து நலம், புத்திரசுகம் கிடைக்கும். மற்றொரு கோயிலான அரவிந்த லோசனார் கோயில் 6வது நவதிருப்பதி ஸ்தலமாகும். 56வது திவ்யதேசமாக அமைந்துள்ளது. கேது தோஷத்தில் இருந்து விடுபட தரிசிக்கவேண்டிய கோயில் இதுஆகும். தென்திருப்பேரையில் உள்ள மகர நெடுங்குழைக்காதர் கோயில் கருடன் சன்னதிக்கு நேரில் எதிரில் பெருமாள் அமையாமல் சற்று விலகி அமைந்துள்ளது.

வேதம் ஓதும் சப்தங்களையும், விழாக்கள் நடைபெறும் ஓசைகளையும், சிறுபிள்ளைகள் விளையாடும் ஒலியையும் இப்பெருமாள் தினமும் கேட்க விரும்பியதால் இவ்வாறு அமைந்துள்ளதாக இத்தலம் பற்றிய பாடல்கள் மூலம் தெரியவருகிறது. நவ திருப்பதிகளில் 7வது ஸ்தலமாகும் இது. திருக்கோளூர் வைத்திமாநிதி பெருமாள் கோயில் நவ திருப்பதிகளில் 8வது திருப்பதியாகும். இழந்த செல்வத்தை திரும்பப்பெற இத்திருத்தலத்தை வழிபட்டுச் செல்வது சிறப்பாகும். ஆதிசேடன் மீது பள்ளி கொண்டுள்ள பெருமாள் மரக்காலை (அளக்கப் பயன்படும் மரத்தாலான பாத்திரம்) தலைக்கு வைத்து படுத்திருப்பது ஆதனூருக்கு அடுத்து இத்திருத்தலத்தில் மட்டுமே. அருள்மிகு ஆதிநாத ஆழ்வார் திருக்கோயில் நவதிருப்பதிகளில் 9வது திருப்பதியாகும். குரு தலமாகவும் உள்ளது.

மரத்தால் செய்யப்பட்டது போன்ற தோற்றம் உடைய கல் நாதசுவரம் இக்கோயிலில் காணவேண்டிய அம்சமாகும். நம்மாழ்வார் சன்னதி விமானம் மூலவரான ஆதிநாதரின் விமானத்தைவிட உயரமானது. நவகிரகங்களின் தோஷங்களை போக்க நவதிருப்பதிகளுக்கும் சென்றுவருவது சிறப்பு என்பது ஆன்மிகவாதிகளின் நம்பிக்கை.



Leave a Comment