பாளையங்கோட்டையில் தசரா திருவிழா கொடியேற்றம்


பாளையங்கோட்டை அருள்மிகு ஸ்ரீஆயிரத்தம்மன் கோயில் உள்பட 12 கோயில்களில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது.

பாளையங்கோட்டை ஸ்ரீஆயிரத்தம்மன் கோயில், அருள்மிகு தூத்துவாரி அம்மன் கோயில், தெற்கு உச்சிமகாளி அம்மன் கோயில், வடக்கு உச்சிமகாளி அம்மன் கோயில், தெற்கு முத்தாரம்மன் கோயில், வடக்கு முத்தாரம்மன் கோயில், புதிய உலகம்மன் கோயில், பழைய உலகம்மன் கோயில், முப்புடாதி அம்மன் கோயில், விஸ்வகர்ம உச்சிமகாளி அம்மன் கோயில், கிழக்கு உச்சி மகாளி அம்மன் கோயில், வண்ணார்பேட்டை பேராத்துச் செல்வி அம்மன் கோயில் ஆகிய 12 கோயில்களில் தசரா திருவிழாவுக்காக கொடியேற்றப்பட்டது.

இக்கோயில்களில் கால்நாட்டு வைபவத்துடன் தசரா திருவிழா தொடங்கி உள்ளது. இதையொட்டி, பாளையங்கோட்டையில் ஸ்ரீஆயிரத்தம்மன் கோயிலில் அபிஷேகம், அலங்காரம், அம்மன் முத்தங்கி அலங்காரம், பைரவர், பூதத்தார் அங்கி சாத்துதல், சிறப்பு பூஜைகள் ஆகியவை நடைபெற்றன. இதையடுத்து கால்நாட்டு வைபவம் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து கோயிலில் வரும் அக். 7இல் மாக்காப்பு திருவிழா, அக். 8இல் காலை 9 மணிக்கு கொடி மரத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி, நண்பகல் 12 மணிக்கு அம்பாள் அபிஷேகம், மாலையில் பாளையங்கோட்டை பகுதியிலுள்ள 11 கோயில்களில் இருந்து சப்பரம் புறப்பட்டு வீதி உலா, இரவு 7 மணிக்கு தீபாராதனை, இரவு 10 மணிக்கு அம்பாள் வீதி உலா ஆகியவை நடைபெறும்.

தொடர்ந்து, இந்த 11 சப்பரங்களும் அக். 9ஆம் தேதி காலை 6 மணிக்கு பாளையங்கோட்டை தசரா மைதானத்திற்கு வந்தடைகின்றன. அங்கு, சப்பரங்கள் அணிவகுப்பு, தீபாராதனை ஆகியவை நடைபெறும். இதையடுத்து தசரா திருவிழா அக். 10 ஆம் தேதி தொடங்கி தினமும் பல்வேறு வழிபாடுகள் நடைபெறும். அக் 19ஆம் தேதி இரவு 10 மணிக்கு 12 சப்பரங்கள் வீதி உலா நடைபெறும். அக். 20 ஆம் தேதி சூரசம்ஹாரமும், 21இல் தீர்த்தவாரியும் நடைபெறும்.



Leave a Comment