பிள்ளையார் கோயில்களில் சதுர்த்தி விழா கொடியேற்றம்


விநாயகர் சதுர்த்தி விழா வரும் 13 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி விநாயகர் கோயிலில் கொடியேற்றத்துடன் சதுர்த்தி விழா தொடங்கி உள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகேயுள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகா் கோயிலில் விநாயகா் சதுா்த்தி பெருவிழா கொடியேற்றப்பட்டது.

கொடியேற்ற நிகழ்ச்சியையொட்டி காலை 10.10 மணிக்கு மூஷிக வாகனம் பொறிக்கப்பட்டுள்ள வெண்கொடி கோயிலை வலம் வந்தது. உடன் புதிதாக செய்யப்பட்ட வெள்ளி சிம்ம வாகனத்தில் கும்பம் வலம் வந்தது. பின்னா் கொடிமரத்தில் வலம் வரப்பட்ட வெண்பட்டு சுற்றப்பட்டு கொடி மரத்திற்கான சிறப்பு பூஜையும், அங்குசதேவருக்கு சிறப்பு பூஜையும் நடத்தப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

இரவு 8.30 மணிக்கு கற்பக விநாயகா் மூஷிக வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தார். தினமும் 2-ம் திருநாள் 8-ம் திருநாள் வரை காலை 9.30 மணிக்கு வெள்ளி கேடகத்தில் சாமி திருவீதி உலா நடைபெற உள்ளது. இரவு ஒவ்வொரு நாளும் சிம்மம், மூஷிகம், கருடன், மயில், ரிஷபம், கமலம், குதிரை, யானை உள்ளிட்ட வாகனங்களில் திருவீதி உலா நடைபெறும்.

செப்.9 ஞாயிற்றுக்கிழமையன்று 6-ஆம் திருவிழாவாக மாலை 5 மணிக்கு கஜமுஹாசுர சம்ஹாரமும், செப்.11 செவ்வாய்கிழமையன்று திருத்தேரோட்டமும் அன்றைய தினம் மாலை 4.30 முதல் இரவு 10 மணி வரை மூலவா் வருடத்திற்கு ஒருமுறை காட்சி தரும் சந்தனக்காப்பு அலங்காரத்தில் தரிசனம் தருவார். தொடா்ந்து 10-ம் திருநாளான விநாயகா் சதுா்த்தி அன்று காலை கோயில் திருக்குளத்தில் விநாயகா் சதுா்த்தி தீா்த்தாவாரி உற்சவமும் நண்பகல் முக்குருணி எனப்படும் மெகா கொழுக்கட்டைப் படைத்தலும் இரவு 11 மணிக்கு பஞ்சமூா்த்திகள் திருவீதி உலாவும் நடைபெற உள்ளது.

இதேபோல, ஆர்.எஸ் மங்கலம் உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. பக்தர்களுக்கு அருபாலித்தார். செப்.11-ம்தேதி திருக்கல்யாணமும், செப்.12-ம் தேதி தேதி தேரோட்டமும், செப்.13-ம் தேதி விநாயகர் சதுர்த்தி தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது. இன்று நடைபெற்ற கொடியேற்ற விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு விநாயகப்பெருமானை தரிசனம் செய்தனர்.



Leave a Comment