திருமகளை திருமார்பில் தரித்த திருமால்
திருமகளை திருமார்பில் தரித்த திருமால் உறையும் பதி என்பதால், இதற்கு ‘திருப்பதி’ என்ற பெயர் வந்தது. இந்த வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
கிருஷ்ண அவதாரத்தில், பகவான் தன்னுடைய திருக்கரங்களால் கோவர்த்தன மலையைத் தாங்கினார். தன்னை ஏந்திய கிருஷ்ணனை, தான் தாங்க வேண்டும் என விரும்பியதாம் கோவர்த்தன மலை. அதன்படி இந்த கலியுகத்தில் திருப்பதி ஏழுமலையானை திருவேங்கட மலையாய் இருந்து தாங்கி நிற்பதாக புராணங்கள் சொல்கின்றன. வேங்கடாத்ரி, சேஷாத்ரி, வேதாத்ரி, கருடாத்ரி, விருஷபாத்ரி, அஞ்சனாத்ரி, ஆனந்தாத்ரி எனும் ஏழு சிகரங்களுடன் வேங்கடமுடையானைத் தாங்கி நிற்கிறது, வேங்கட மலை.
ஒருமுறை பூமாதேவியைப் பாயாகச் சுருட்டி பாதாளத்தில் அடைத்து வைத்தான் இரண்யாட்சன் என்னும் அசுரன். திருமால் பூமாதேவியைக் காக்கும் பொருட்டு வராகமாக அவதரித்தார். பின்பு இரண்யாட்சனுடன் போரிட்டு அவனைக் கொன்று பூமாதேவியை மீட்டார். பூமித்தாயை தன் மடியில் தாங்கி வராக மூர்த்தியாய் தேவர்களுக்கு காட்சிக்கொடுத்தார்.
அப்போது பிரம்மதேவன் திருமாலை வேண்டி, ‘வராக மூர்த்தியாகியத் தாங்கள், கலியுக மக்களைக் காக்கும்பொருட்டு திருவேங்கடத்தின் சேஷாத்ரி சிகரத்தில் எழுந்தருளவேண்டும்' என்றார்.
அதன்படி வராகமூர்த்தி திருமலை எனும் திருவேங்கடத்தில் எழுந்தருளினார். திருவேங்கடம் என்பதற்கு இருவகை பொருளுண்டு. ஒன்று தன்னை அண்டியவர்களுடைய பாவங்களை எரித்துவிடுதல் மற்றொன்று தன்னை அண்டியவர்களுக்கு அழிவில்லாத ஐஸ்வரியங்களைத் தருதல் . சிலப்பதிகாரமும், மணிமேகலையும் இத்தலத்தை திருவேங்கடம் என்றே குறிக்கின்றன. திருமலையை மேல்திருப்பதி என்றும் அழைக்கிறார்கள். திருமகளை திருமார்பில் தரித்த திருமால் உறையும் பதி என்பதால், இதற்கு ‘திருப்பதி’ என்ற பெயர் வந்தது.
Leave a Comment