திருநள்ளாறில் சனீஸ்வரனுக்கு, பரிகாரம் செய்ய சில வழிமுறைகள்!
திருநள்ளாறு வரும் பக்தர்கள் நளதீர்த்தம் சென்று, வலமாகச் சுற்றி வணங்கி குளத்தின் நடுவே இருக்கும், நளன், தமயந்தி சிலைகளை வணங்க வேண்டும். நல்லெண்ணெய் தேய்த்து, வடக்கு அல்லது கிழக்கு திசை பார்த்து நின்று 9 முறை மூழ்க வேண்டும். குளித்து துவட்டி வேறு ஆடை அணிந்தபிறகு, பிரம்ம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தங்களில் உள்ள புனித நீரை தெளித்துக்கொள்ள வேண்டும்.
திருக்கோயிலினுள் இருக்கும் ஸ்வர்ண கணபதி, முருகர் சந்நிதியை வணங்கி, திருநள்ளாற்றின் நாயகர் தர்ப்பாரண்யேஸ்வரரையும், அடுத்து தியாகேசரையும் வணங்க வேண்டும். தொடர்ந்து பிராணேஸ்வரி அம்மனை வணங்கிய பின்னரே இங்கிருக்கும் சனிபகவானை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம். எள் தீபம் ஏற்றுவது தொடங்கி அவரவர் வசதிக்கு ஏற்ப பூஜைகளைச் செய்து சனிபகவானுக்கான பரிகாரங்களைச் செய்து கொள்ளலாம். சனிபகவானை சனிக்கிழமை மட்டுமின்றி வாரத்தின் எல்லா நாள்களிலும் வரும் சனிஹோரை நேரத்தில் வழிபடலாம். இதனாலும் கூடுதல் பலன் கிட்டும்.
கடுமையான சனிதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பாதிப்பிலிருந்து விடுபட, சனிபகவானை பிரார்த்தித்து, சனிக்கிழமைதோறும் ஒருவேளை உபவாசம் இருத்தல் நல்லது. சனிபகவானுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, கறுப்பு வஸ்திரம், வடைமாலை சாத்தி, எள்ளுச் சாதம் நைவேத்தியம் செய்யலாம். எள்ளால் ஆன இனிப்புப் பலகாரங்களைப் பெருமாளுக்கும் சனிபகவானுக்கும் படைக்கலாம். சனிபகவானின் அருளினைப் பெற ஆஞ்சநேயர், கணபதியை வணங்கலாம். சனிபகவான் நீதிமான், நியாயவான் என்று போற்றப்பெறுபவர். நமக்குரிய கடமைகளைத் தவறாமல் செய்து, ஈஸ்வரனை வழிபட்டு வந்தால் அதிக பாதிப்பின்றி வாழலாம்.
Leave a Comment