திருத்தணி முருகன் கோயிலில் ஆவணி கிருத்திகை விழா
முருகன் கோயிலில் நேற்று நடந்த ஆவணி கிருத்திகை விழாவில், காவடிகளுடன் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோயிலில் குவிந்ததால் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். திருத்தணி முருகன் கோயிலில் ஆவணி மாத கிருத்திகை விழா நேற்று நடந்தது. விழாவை ஓட்டி, அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்ககிரீடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.
காவடி மண்டபத்தில் உற்சவர் பெருமானுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு, 7 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் வெள்ளிமயில் வாகனத்தில், மாடவீதியில் ஒரு முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஆவணி மாத கிருத்திகை விழாவில் பல்லாயிரணக்கான பக்தர்கள் காவடிகளுடன் மலைக் கோயிலில் குவிந்தனர். பொதுவழியில் பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் மூலவரை தரிசித்தனர். முருகன் மலைக்கோயிலில் நேற்று கிருத்திகை என்பதால், அதிகளவில் பக்தர்கள் இரு சக்கர வாகனம், கார், வேன் மற்றும் சுற்றுலா பேருந்துகள் மூலம் மலைப்பாதை (காட்ரோடு) வழியாக சென்றதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மலைப்பாதையில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்பட்டதால், நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
Leave a Comment