சனிதோஷம் நீக்கும் திருநள்ளாறு.....
சனிபகவானுக்கு உரிய பரிகாரத் தலமாகத் திகழ்கிறது திருநள்ளாறு திருத்தலம். தர்ப்பை அடர்ந்து வளர்ந்திருந்த காரணத்தால், இந்தப் பகுதி தர்ப்பாரண்யம் என்று முதலில் வழங்கப்பட்டது, பின்னர் நகவிடங்கபுரம் என்றும் பெயர் பெற்றது. இங்கு அமர்ந்து இருக்கும் ஈசனின் திருப்பெயர் தர்ப்பாரண்யேஸ்வரர். அம்பிகையின் திருப்பெயர் பிராணேஸ்வரி. நளமகாராஜனை, சனிபகவானின் பீடிப்பிலிருந்து விடுவித்து, மறுபடியும் வளமான வாழ்க்கைக்கு ஆற்றுப்படுத்திய தலம் இது என்பதால் நள்ளாறு என அழைக்கப்படுகிறது. சுயம்புவாக தர்ப்பைவனத்தில் தோன்றியதால் ஈசன் தர்ப்பைத் தழும்புகளுடன் காட்சி தருகிறார். தேவார மூவரான அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோர்களால் பாடல் பெற்ற தலம் இது.
திருநள்ளாறு
சனிபகவானின் தோஷம் நீங்க விரும்புபவர்கள், இந்தத் தலத்தில் திருஞானசம்பந்தர் அருளிய "போகமார்த்த பூண்முலையாள்" என்று தொடங்கும் பதிகம் பாடுவது நல்லது. சமணர்களுக்கு எதிரான சம்பந்தரின் அனல் வாதத்தில், இந்தப் பதிகம் எழுதப்பட்டிருந்த சுவடிகள் மட்டும் கருகாமல் இருந்ததால் "பச்சைப் பதிகம்" என்ற சிறப்புப் பெயரால் வழங்கப்படுகிறது. விஷ்ணு, பிரம்மன், இந்திரன், அஷ்டதிக்கு பாலகர்கள், அகத்தியர், புலஸ்தியர், அர்ஜுனன், நளன் உள்ளிட்ட பலரும் வழிபட்ட ஈசன் இவர். தமிழகத்தின் சப்தவிடங்கத் தலங்களில் திருநள்ளாறும் ஒன்று. விடங்க என்றால் 'செதுக்கப்படாத மூர்த்தி' என்று பொருள். ஏழு சுயம்புத் தலங்களில் திருநள்ளாறும் ஒன்று.
தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் அருளும் சனிபகவான், ஈசனின் கட்டளைப்படி இங்கு வந்து வணங்கும் பக்தர்களுக்கு நல்வாழ்வினை அளிக்கும் பணியை மேற்கொண்டுள்ளார். சனிபகவானால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தாலும், இந்தத் தலத்துக்கு வந்து ஈசனை வணங்கினால் நல்ல பலன்களைப் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.
தேவர்களை மறுத்து நிடத நாட்டு மன்னன் நளனைக் கரம் பிடித்தாள் சேதி நாட்டு இளவரசி தமயந்தி. இதனால் கோபமான தேவர்கள், சனிபகவானின் வழியாக நளனை கடுமையாக சோதித்தார்கள். எல்லா செல்வத்தையும் இழந்து, இறுதியில் தமயந்தியையும் பிரிந்து சேவகனாக மாறினான் நளன். பின்னர் இங்குள்ள தர்ப்பாரண்யேஸ்வரரை வணங்கி, சனீஸ்வரனையும் சரணடைந்தான். அதனால், சனிபகவானின் கருணையால் இழந்த தன் நாட்டையும் அளவற்ற செல்வங்களையும் பெற்றான் என்று தலவரலாறு கூறுகிறது. சனிபகவானின் கருணையை எண்ணி நளராஜனே பலவிதமான பண்டிகைகளை உருவாக்கிக் கொண்டாடி மகிழ்ந்தான். இவன் நீராடிய திருக்குளம் இன்றும் நளதீர்த்தம் என்றே வழங்கப்படுகிறது. ஜன்மச் சனி, கண்ட சனி, அஷ்டமத்து சனி, மத்திய சனி, ஆத்ய சனி, ஏழரை சனி என்று சனிபகவானால் எத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டிருந்தாலும், இந்தத் தலத்துக்கு வந்து பரிகாரம் செய்வது வழக்கம். நளதீர்த்ததில் நீராடி, எள் தீபம் ஏற்றி, கருங்குவளை மலர் சாத்தி சனீஸ்வரனை வணங்கினால் தீராத எந்தத் துயரமும் தீரும்.
Leave a Comment