திருப்பதி பிரம்மோற்சவம் -13ந் தேதி தொடக்கம்!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் செப்டம்பர் 13-ந்தேதியில் இருந்து 21-ந்தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. அதேபோல் அக்டோபர் மாதம் 10-ந்தேதியில் இருந்து 18-ந்தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. காலை, இரவு இருவேளைகளில் ஆகம விதிப்படி பல்வேறு வாகன வீதிஉலா நடக்கிறது.
தொடர்ந்து காலை நேரத்தில் வாகன வீதி உலா வழக்கம்போல் 9 மணியில் இருந்து பகல் 11 மணிவரை நடந்து வந்தது. இரவில் 9 மணியில் இருந்து 11 மணிவரை நடந்து வந்தது. இந்த ஆண்டு காலை நேரத்தில் வழக்கம்போல் 9 மணியில் இருந்து பகல் 11 மணிவரை வாகன வீதி உலா நடக்கும். அதில் எந்தவித மாற்றமும் இல்லை.ஆனால் இந்த ஆண்டு இரவில் நடக்கும் வாகன வீதி உலா நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இரவு 8 மணியில் இருந்து 10 மணிவரை நடக்கிறது. கடந்த ஆண்டு கருட சேவை நிகழ்ச்சி இரவு 8 மணிக்கு தொடங்கியது. ஆனால் இந்த ஆண்டு இரவு 7 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 11-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி, 12-ந்தேதி இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை அங்குரார்ப்பணம், 13-ந்தேதி மாலை 4.45 மணியளவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடக்கிறது. அதைத்தொடர்ந்து ஆந்திர மாநில அரசு சார்பில் முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு, மூலவர் வெங்கடாஜலபதிக்கு பட்டு வஸ்திரம் மற்றும் மங்கலப் பொருட்கள் சமர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் இரவு 8 மணியில் இருந்து 10 மணிவரை பெரிய சேஷ வாகன வீதிஉலா நடக்கிறது.
14-ந்தேதி காலை சிறிய சேஷ வாகன வீதிஉலா, இரவு அம்ச வாகன வீதிஉலா, 15-ந்தேதி காலை சிம்ம வாகன வீதிஉலா, இரவு முத்துப்பந்தல் வாகன வீதிஉலா, 16-ந்தேதி காலை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, இரவு சர்வ பூபால வாகன வீதிஉலா, 17-ந்தேதி காலை மோகினி அவதாரத்தில் பல்லக்கு வாகன வீதிஉலா, இரவு கருட வாகன வீதிஉலா (கருட சேவை) நடக்கிறது. 18-ந்தேதி காலை அனுமந்த வாகன வீதிஉலா, மாலை 5 மணியளவில் தங்கத்தேரோட்டம், இரவு யானை வாகன வீதிஉலா, 19-ந்தேதி காலை சூரிய பிரபை வாகன வீதிஉலா, இரவு சந்திர பிரபை வாகன வீதிஉலா, 20-ந்தேதி காலை 7 மணியில் இருந்து 11 மணிவரை தேரோட்டம், இரவு குதிரை வாகன வீதிஉலா, 21-ந்தேதி காலை 7 மணியில் இருந்து 9 மணிவரை சக்கர ஸ்நானம் (சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி), இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை கொடியிறக்கத்தோடு பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது. மேற்கண்ட அனைத்து வாகனங்களில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பிரம்மோற்சவ விழா நாட்களில் அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Leave a Comment