திருச்செந்தூரில் ஆவணி திருவிழா...30ந் தேதி கொடியேற்றம்!


முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படுகிறது திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். திருச்செந்தூரை கடல் அலைகள் வருடுவதால் திருச்சீரலைவாய் என்றும், முருகப்பெருமான் சூரபதுமனை வென்ற தலம் ஆதலால், ஜயந்திபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. அலைகள் ஓம் எனும் பிரணவ மந்திரத்தை ஓதியபடி அழகன் திருவடிகளை பணிந்து செல்கிறது. இந்த கோவிலில் சுப்பிரமணிய சுவாமிக்கு உந்து சக்தியாக பஞ்சலிங்கங்களும் வெங்கடேச பெருமாளும் உள்ளனர்.

இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் ஆவணித் திருவிழாவும் ஒன்று. இந்த ஆண்டு ஆவணித் திருவிழா வரும் ஆகஸ்டு 30ஆம் தேதி தொடங்கி, செப்டம்பர் 10ஆம் தேதி வரை 12 நாள்கள் நடைபெறுகிறது. இதனையொட்டி 29ஆம் தேதி மாலையில் யானை மீது கொடிப்பட்டம் ரதவீதிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது. கொடியேற்றத்தை முன்னிட்டு 30ஆம் தேதி அதிகாலை 1 மணிக்கு திருக்கோயில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெறுகிறது. காலை 6 மணிக்கு கொடிமரத்தில் கொடிப்பட்டம் ஏற்றப்பட்டு, கொடிமரத்துக்கு அபிஷேகம் மற்றும் விசேஷ தீபாராதனை நடைபெறுகிறது. 12 நாள்கள் நடைபெறும் இத்திருவிழா நாள்களில் தினமும் சுவாமி – அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வருகின்றனர்.

செப்டம்பர் 3ஆம் தேதி, இரவு 7.30 மணிக்கு சிவன் கோயிலில் குடவருவாயில் தீபாராதனை நடைபெறுகிறது. 5ஆம் தேதி காலை 5.30 மணிக்கு சுவாமி ஆறுமுகநயினார் உருகுசட்ட சேவையும், 9 மணிக்கு சண்முக விலாசத்தில் இருந்து சப்பரத்திலும், மாலை 4.30 மணிக்கு சிவப்பு சாத்தியிலும் எழுந்தருளி வீதியுலா வருதலும் நடைபெறுகிறது. செப்டம்பர் 6ஆம் தேதி காலை 5 மணிக்கு சுவாமி ஆறுமுகநயினார் வெள்ளிச் சப்பரத்திலும், காலை 10.30 மணிக்கு பச்சை சாத்தியிலும் எழுந்தருளி வீதியுலா வருதலும் நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 8ஆம் தேதி காலை 6 மணிக்கு நடைபெறுகிறது. செப்டம்பர் 10ஆம் தேதியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இத்திருவிழாவில் கலந்து கொண்டு முருகப்பெருமானின் அருளைப் பெற எண்ணற்ற பக்தர்கள் திருச்செந்தூர் வருகின்றனர்.



Leave a Comment