திருமணத் தடைகளை நீக்கும்...மயிலம் கோவில்!


முருகப்பெருமானுக்குத் திருமணம் நடந்த தலம் மயிலம். அதனால் இந்தக் கோயிலில் திருமணம் செய்து கொள்வது விசேஷம் என்று கருதப்படுகிறது. அதனால் முகூர்த்த நாட்களில் இங்குள்ள மண்டபத்தில் ஏராளமான திருமணங்கள் நடைபெறுகின்றன. 

இத்தலத்தில் முதலாக வீற்றிருப்பவர் இருப்பவர் விநாயகர். அவரை வணங்கி விட்டு நகர்ந்தால் பக்கத்திலேயே பாலசித்தர் ஜீவ சமாதி அடைந்த ஆலயம். பொதுவாகவே சித்தர்கள் ஜீவசமாதி அடைந்த தலங்களில், பக்தர்களுக்கு வேண்டும் வரங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. எவரிடமும் சரணடையாத முருகனது வேலாயுதம், பாலசித்தரிடம் வசமானது என்பது ஐதீகம். இதிலிருந்து பாலசித்தரின் சக்தி விளங்கும். 

இன்றைக்கும் மயிலத்தில் நடக்கும் கந்த சஷ்டி விழாவின்போது சூர சம்ஹாரத்துக்குக் கிளம்பும் முருகர், பாலசித்தரிடமிருந்தே வேலாயுதத்தைப் பெற்றுச் செல்கிறார். பாலசித்தருக்கு அடுத்து மூலவர் காட்சி தருகிறார். வள்ளி- தெய்வானையுடன் இணைந்து நின்ற கோலத்தில் காட்சி தரும் முருகனின் ஒரு கையில் வேல். இன்னொரு கையில் சேவற்கொடி. பெரும்பாலான கோயில்களிலும் முருகனின் வாகனமான மயில் தெற்கு நோக்கியோ, நேராகவோ இருக்கும். இங்கு மட்டும் வடக்குத் திசையை நோக்கியபடி இருப்பது கோயிலின் சிறப்பு. 

உற்சவமூர்த்தி முருகப்பெருமானின் அருகில் அவரின் படைத் தளபதியான வீரபாகுவும் உற்சவராக இருக்கிறார். செவ்வாய்க்கிழமை காலையில் இவருக்குப் பாலபிஷேகம் செய்து, அர்ச்சனை செய்தால் சீக்கிரம் திருமணம் நடக்கும் என்பதால், ஒவ்வொரு செவ்வாயிலும் ஏராளமான பெண்கள் இங்கு வருகிறார்கள். எப்போதும் அமைதி நிலவும் இந்தத் தலத்துக்கு வந்து வழிபடுகிறவர்களுக்கு நிச்சயம் மன அமைதி கிடைக்கும்!



Leave a Comment