பெருமைகள் கொண்ட ஆவணி அவிட்டம்!
ஆவணி மாத அவிட்ட நட்சத்திரம்.... இந்த நாள்... பூணூல் அணிபவர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
‘‘நயனம் என்றால் கண். நமக்கு இரண்டு நயனங்கள் (கண்கள்)இருக்கின்றன. அவை ஊனக் கண்கள். இது தவிர மூன்றாவதாக ஒரு கண்தேவை. அது ஞானக்கண். ஞானம் எனும் கண்ணைப் பெறுவதற்கான சடங்கு... உபநயனம். அதாவது, உபநயனம் என்றால் துணைக்கண் என்று அர்த்தம்.
ஞானம் எனும் கல்வி அறிவைப் பெற்றால் மட்டுமே ஒருவன் வாழ்வில் முழுப்பயனைப் பெறுகிறான் என்பது ஆன்றோர் வாக்கு.
கடவுளைப் பற்றி அறியும் அறிவே உயர்ந்த அறிவு. அதனால் பூணூல் அணியும் சடங்கினை பிரம்மோபதேசம் என்று குறிப்பிடுகின்றனர். மகாவிஷ்ணு பூலோகத்தில் பல அவதாரங்களை எடுத்து தர்மத்தை நிலைநாட்டினார். அதில் வாமன அவதாரமும் ஒன்று.
அதிதி , காஷ்யபரின் பிள்ளையாக அவதரித்த வாமன மூர்த்திக்கு சூரியபகவானே பூணூல் அணிவித்தல் செய்து வைத்தார். பகவானே பூணூல் அணிந்து கொண்டதன் மூலம், இந்தச் சடங்கின் சிறப்பை உணரலாம். பூணூலை யக் ஞோபவீதம் என்பார்கள். அதாவது மிகவும் புனிதமானது என்று அர்த்தம்.
பூணூல் அணிபவர்களும், அதனைத் தயாரிப்பவர்களும் ஆச்சார அனுஷ்டானங்களில் இருந்து சிறிதும் விலகுதல் கூடாது.
ஆவணி அவிட்டத்தன்று பூணூல் அணியும் இளைய தலைமுறையினரும் இதன் முக்கியத் துவத்தை உணர்வது அவசியம். இதை குருமுகமாக, குருவைக் கொண்டே செய்ய வேண்டும். வீட்டில் ஆச்சார்யர்களை வரவழைத்து, காயத்ரி மந்திரம் ஜபித்து பின் பூணூல் போடுவார்கள்.
இப்போதெல்லாம் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குழுக்களாகக் கோயிலுக்குச் சென்று அனைவரும் ஆச்சார்யரின் உதவியுடன் புதிய பூணூல் அணிந்து கொள்கின்றனர்.
மூன்று வயது முதல் ஐந்து வயதிற்குள் ஆண் குழந்தைகள் குருமுகமாக காயத்ரி மந்திரம் ஓதி, குழந்தையை தந்தை மடிமீது அமர வைத்து முதன் முதலாகப் புதிய பூணூல் போட்டு விடுவார்கள். இதை ஒரு திருமண விழா போலவே கொண்டாடுவார்கள்.
சிலர் தன் உறவினர் வீட்டுத் திருமண விழாவில் மணமகள் அமர்ந்த மேடையில் அமர்த்தியும் செய்து விடுவார்கள். இதற்கு உபநயனம் என்று பெயர். உபநயனம் செய்து புதிய பூணூலை அணிந்த பிறகு, தினமும் காயத்ரி ஜபத்தை மூன்று வேளை தவறாமல் ஓத வேண்டும். வருடம் ஒருமுறை ஆவணி அவிட்ட நாளில், புதிய பூணூல் அணிந்துகொள்ள வேண்டும்.
பூணூல் அணிவிக்கும்போது குரு சொல்லித் தரும் ஜபம்
ஓம் பூர்புவ, சுவஹ, தத் ஸவிதுர் வரோண்யம்,
பர்கோ தேவஸ்ய தீமஹி,
தியோ யோந, ப்ரசோதயாத்
என்பதாகும்.
இந்த மந்திரத்தை தினம் மூன்று வேளை கை மேல் அங்கவஸ்திரத்தால் மூடியபடி 108 அல்லது 1008 முறை ஜபிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து செய்தால், நம் பாவங்கள் அனைத்தும் விலகிவிடும் என்பது ஐதீகம்!
சுண்டு விரல் அடியிலிருந்து ஒவ்வொரு கணுவாக எண்ணி
(3), மோதிர விரல் நுனி (1), நடுவிரல் நுனி (1), ஆட்காட்டிவிரல் நுனி (1), கட்டை விரல் இரண்டு கணு (2) ஆள்காட்டி விரலின் கீழ்க்கணு (1), நடுவிரலின் கீழ்க்கணு (1), மோதிர விரல் கீழ்க்கணு (1) என்று மொத்தம் 11 எண்ணிக்கையில் எண்ணி, இந்த மந்திரத்தை ஓத வேண்டும் ‘
இது பாவங்களைப் போக்கும். நல்ல ஆரோக்கியம், அழகு, பலம், வீரியம், தேஜஸ் முதலானவற்றைத் தருகிறது. மனதைப் பரிசுத்தப்படுத்துகிறது. ஜபிப்பவர்களுக்கு அஷ்டமா ஸித்திகளைக் கொடுக்கிறது. புத்திமானாகத் திகழச் செய்கிறது.
காலையில் கிழக்குமுகமாக சூரியனைப் பார்த்து நின்று கொண்டு, வஸ்திரத்தால் இரு கைகளையும் மூடி முகத்திற்கு நேராக வைத்து காயத்ரி மந்திரத்தை ஜபிக்க வேண்டும். மதியம் கிழக்கு முகமாக அமர்ந்து கைகளை மார்புக்கு நேராக வைத்து ஜபிக்க வேண்டும். மாலையில் மேற்கு முகமாக அமர்ந்து நாபிக்குச் சமமாக கைகளை வைத்து ஜபிக்க வேண்டும்
Leave a Comment