மதுரை சுந்தரேசுவரர்...தங்கப்பல்லக்கில் பவனி!


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் ஆவணி மூல திருவிழாவில் சிவபெருமானின் திருவிளையாடல்கள் தினமும் நிகழ்த்தப்படுகின்றன. 7-ம் நாளான நேற்று வளையல் விற்ற லீலை அலங்காரத்தில் சுந்தரேசுவரர் காட்சி அளித்தார்.

இந்த விழாவையொட்டி சுவாமியும், அம்மனும் காலையில் தங்கப்பல்லக்கில் எழுந்தருளி ஆவணி மூலவீதி, மேலமாசிவீதி வழியாக இன்மையிலும் நன்மை தருவார் கோவிலுக்கு சென்றனர். அங்கிருந்து மாலை தங்கப்பல்லக்கில் புறப்பட்டு மேலமாசி வீதி, மேலக்கோபுர தெரு, தானப்ப முதலியார் அக்ரஹாரம், வடக்கு ஆவணி மூலவீதி வழியாக கோவிலை வந்தடைந்தனர்.அதன் பின்னர் சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேக நிகழ்ச்சி தொடங்கியது. முன்னதாக சுவாமி சன்னதியில் உள்ள ஆறுகால் பீடத்தில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளினார்கள். அங்கு சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க இரவு 7.35 மணிக்கு சுந்தரேசுவரர் சாமிக்கு பட்டாபிஷேகம் நடந்தது. அப்போது சாமிக்கு நவரத்தினகற்கள் பதித்த செங்கோல் வழங்கப்பட்டு, வைர கிரீடம் சூட்டப்பட்டது. அதை தொடர்ந்து சாமிக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

 பின்பு சுவாமியின் பிரதிநிதியாக மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் செங்கோலை பெற்று, 2-ம் பிரகாரம் வலம் வந்து, மீண்டும் சாமியிடம் கொடுத்தார்.இதை தொடர்ந்து மீனாட்சி அம்மன் ஆட்சி நிறைவுபெற்று இன்று முதல் சுந்தரேசுவரர் ஆட்சி 8 மாதங்களுக்கு நடைபெறுவதாக ஐதீகம்.



Leave a Comment