ஜோதி மயமாக ...இன்று காட்சி தரும் நெல்லையப்பர்!
நெல்லையப்பர் கோவில் விழாக்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆவணி மூலத்திருவிழாவாகும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10-ம் திருநாளான இன்று காலை நெல்லையில் இருந்து கருவூர் சித்தர் மானூர் வந்தடைகிறார். சுவாமி சந்திரசேகரர், பவானி அம்மன், மன்னர் பாண்டியராஜன், அகத்தியர், சண்டிகேசுவரர், குங்கிலிய நாயனார், தாமிரபரணி அம்மன் ஆகிய மூர்த்திகளின் வீதிஉலா நிகழ்ச்சி நடக்கிறது.
அதன் பின்னர் மேற்கண்ட மூர்த்திகள், மானூர் புறப்பட்டு நாளை (21-08-18) காலை மானூர் வந்து சேர்கிறார்கள். அங்கு மானூர் அம்பலவாண சுவாமி கோவிலில் வைத்து கருவூர் சித்தருக்கு இறைவன் ஜோதி வடிவாக காட்சி கொடுக்கும் வைபவம் நடக்கிறது. பின்னர் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகளும் நடக்கிறது. இந்நிகழ்ச்சியே ஆவணி மூலத்திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆவணி மூலத்திருவிழா வரலாறானது.
ஓரு நாள் கருவூர் சித்தர் பெருமை வாய்ந்த திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் முன்பு வந்து சுவாமி நெல்லையப்பரை அழைத்த போது சுவாமி நெல்லையப்பரிடம் இருந்து பதில் வராததால் கோபம் அடைந்த சித்தர், ஈசன் இங்கு இல்லை. இவ்விடத்தில் எருக்கும் குறுக்கும் எழுக என சாபமிட்டு அருகில் உள்ள சிவத்தலமான மானூர் செல்ல முற்பட்டார்.
அப்போது இதனை அறிந்த நெல்லையப்பர் ஒரு சிவத்தொண்டராக வந்து சித்தரை தடுத்து அழைத்தார். சித்தர், அந்த சிவத்தொண்டரை பார்த்து, நீ யாரென்று கேட்க, தான் தொண்டருக்கெல்லாம் தொண்டர் என்று கூறி பணிந்தார். சற்றே கோபம் தணிந்த சித்தர், இறைவனை மானூர் வந்து தனக்கு காட்சியளித்து சாப விமோசனம் பெறச் சொல் என்று சிவத்தொண்டரிடம் கூறிவிட்டு மானூருக்கு புறப்பட்டார். எனவே மறுநாள் காலை சுவாமி நெல்லையப்பரும், காந்திமதி அம்மனும் மானூர் சென்றனர். மன்னர் பாண்டியராஜன், அகத்தியர், குங்குலிய நாயனார், சண்டிகேசுவரர், தாமிரபரணி அம்மன் ஆகியோர் சேர்ந்து தாங்களும் அந்த திருக்காட்சியை காண விரும்பி இறைவனோடு மானூர் வந்தனர்.
மானூரில் கருவூர் சித்தருக்கு இறைவன் ஜோதி மயமாக காட்சி தந்து அருளுகிறார். இதனால் சினம் தணிந்த சித்தர் ஈசன் இங்கு உளன். எருக்கும், குறுக்கும் அறுக என்று சாப விமோசனம் வழங்குகிறார் கருவூர் சித்தர். மேலும் ஆண்டுதோறும் வரும் ஆவணி மூலத்திருநாளன்று அடியேனுக்கு இறைவன் காட்சி கொடுக்க வேண்டும் என்றும், அக்காட்சியை கண்டு வழிபடுவோருக்கு முக்தி கிடைக்க இறைவன் அருள்புரிய வேண்டும் என்றும் இறைவனை கருவூர் சித்தர் வேண்டி நெல்லையப்பரும் அவ்வாறே அருள்கிறார். இதுவவே இத்திருத்தலத்தில் கொண்டாடப்படும் ஆவணி மூலத்திருவிழா வரலாறாகும்.
Leave a Comment