களைக்கட்டிய...குறுக்குத்துறை முருகன் கோவில் திருவிழா!
திருநெல்வேலி சந்திப்பு குறுக்குத்துறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் ஆவணித் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம் அதன்படி இந்த வருடத்திற்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் கொண்டாடப்படும் இத்திருவிழாவில் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடக்கின்றன. வருகிற 22-ந் தேதி காலை உருகு சட்ட சேவையும், மாலையில் சிகப்பு சாத்தி தங்க சப்பரத்தில் சுவாமி, அம்மன் நெல்லை மாநகருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 23-ந் தேதி காலை சுவாமி வெள்ளை சாத்தியும், பச்சை சாத்தியும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 25-ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. அன்று காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் தேர்வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 26-ந் தேதி தீர்த்தவாரி, அன்று இரவில் வெள்ளி மயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி வீதி உலா வருதல் நடக்கிறது. 27-ந் தேதி காலை 9 மணிக்கு சுவாமி தெப்ப மண்டபத்துக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று இரவு தெப்பத்திருவிழா நடக்கிறது. இத்திருவிழாவில் பங்கு பெற திரளான பக்தர்கள் இத்திருத்தலத்திற்கு வந்த வண்ணமுள்ளனர்.
Leave a Comment