திருப்பதி - இன்று மகா கும்பாபிஷேகம்...பக்தர்கள் குவிந்தன!


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த 11ம் தேதி சேனாதிபதி உற்சவம், அங்குரார்ப்பணத்துடன் கும்பாபிஷேக பூஜைகள் தொடங்கியது. தொடர்ந்து மூலவர் சன்னதிக்கு மேல் உள்ள ஆனந்த நிலையம் மற்றும் இதர சன்னதிகளின் கோபுரங்களுக்கு மராமத்து பணிகள், தங்க கொடிமரம் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. 3ம் நாளான நேற்று முன்தினம் அஷ்டபந்தன சமர்ப்பணம் நடந்தது. நேற்று யாகசாலையில் புண்ணியாகவாச்சனம், வாஸ்து யாகம் மற்றும் சுத்தி நிகழ்ச்சிகள் நடந்தது.  மாலை 3 மணிக்கு மூலவருக்கு மகாசாந்தி அபிஷேகமும், இரவு பூர்ணாஹூதியும் நடைபெற்றது. தொடர்ந்து இன்று காலை 10.16 மணி முதல் 12 மணிக்குள் மூலவர் கருவறைக்கு மேல் உள்ள ஆனந்த நிலையம், ராஜகோபுரம் மற்றும் இதர சன்னதிகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. 

கும்பாபிஷேகத்தையொட்டி குறைந்தளவு பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டதால் பக்தர்கள் வருகை குறைவாக இருந்தது. இந்நிலையில், நேற்று சுதந்திர தினம் அரசு விடுமுறை என்பதால், இன்று நடைபெறும் கும்பாபிஷேக விழாவை காண ஏராளமான பக்தர்கள் நேற்றிலிருந்து வந்த வண்ணம் உள்ளனர். இதனால் திருமலையில் கூட்டம் அதிகரித்து வருகிறது. மூலவர் தரிசனம் இல்லாவிட்டாலும் கலசத்தின் மீது நடக்கும் அபிஷேகத்தை காண திரளான பக்தர்கள் வருகின்றனர்.



Leave a Comment