ஆடி அமாவாசையில்...தர்ப்பணம் செய்தால் கோடி புண்ணியம்!


முன்னோர்களின் ஆன்மா சாந்தியடையவும், அவர்கள் தம் குடும்பத்தை காக்கவும் பித்ரு பூஜை செய்யப்படுவது வழக்கம். குறிப்பாக அமாவாசை தினங்களில் தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது ஐதீகம். ஆடி முதல் மார்கழி முடிய உள்ள காலம் தேவர்களுக்கு இரவுக் காலம். ஆதலால் நம்முடைய முன்னோர்கள் நமக்குக் காவலாக நம் உலகத்துக்கு வருகின்றனர் என்பது ஐதிகம். அவர்கள் பித்ரு லோகத்திலிருந்து புறப்படும் நாள் ஆடி அமாவாசை எனவே, அவர்களைப் பூமிக்கு வரும்படி அழைப்பு விடுத்து ஆடி அமாவாசையன்று அவர்களுக்குத் தர்ப்பணம் கொடுக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்.

ஆடி அமாவாசையன்று ராமேஸ்வரத்தில் கடல் நீராடி முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுப்பது அளவற்ற நன்மைகளைத் தரவல்லது. குறிப்பாக, அக்னி தீர்த்தத்தில் நீராடுவது மிகவும் விசேஷம். பித்ரு வழிபாட்டைக் காலையிலேயே தொடங்கிவிட வேண்டும். ஏதேனும் ஒரு தீர்த்தக் கரைக்குச் சென்று நீராடி, தர்ப்பணம் கொடுத்து வந்து, மதியம் வீட்டில் மறைந்த நம் முன்னோர்களின் படங்களுக்கு மாலை அணிவித்து, விளக்கேற்றி, ஓர் இலையில் அவர்களுக்கு மிகவும் பிடித்தமான உணவு வகைகளைப் படைக்க வேண்டும். பின்னர், தீபாராதனை காட்டி, காகத்துக்கு உணவளிக்க வேண்டும். பிறகு, வீட்டில் உள்ள பெரியவர்களை முதலில் சாப்பிடச் செய்ய வேண்டும். பிறகே நாம் சாப்பிட வேண்டும். இப்படிச் செய்வதால், நம் முன்னோர்கள் மிகவும் மகிழ்ந்து நம்மை ஆசீர்வதிக்கின்றனர். அவர்களுடைய ஆசிகளால் நம் வாழ்க்கையும் நம் சந்ததியினரின் வாழ்க்கையும் மகிழ்ச்சியும் சகல செல்வங்களும் நிறைந்ததாக அமைகிறது. மேலும் இன்று தர்ப்பணம் கொடுக்க ஏற்ற இடங்களாக கோவில்கள், குளங்கள், கடல் போன்ற இடங்களில் செய்யப்படும் தர்ப்பணங்களுக்கு மிக அதிகமான சக்தி உள்ளதாக கருதப்படுகிறது. திருவாலங்காடு, திருவள்ளூர், ராமேஸ்வரம், புதுக்கோட்டை அருகில் உள்ள திருமயம் அடுத்து வரும் ஊர் அரண்மனைப்பட்டி, திருவண்ணாமலை, திருவிடைமருதூர், காசி, திருநள்ளாறு ஆகிய இடங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது மிக சிறந்தது. 

 

 



Leave a Comment