அல்லல் போக்கும்...அபிராமி அன்னை திருத்தலம்!


சென்னை வேளச்சேரி தாம்பரம் வழித்தடத்தில் சேலையூரில் அமைந்துள்ளது அருள்மிகு அபிராமி அம்மன் உடனுறை அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்இத்திருத்தலத்தில் அற்புதமான அழகுடன் அபிராமி அம்மன் காட்சியளிக்கிறாள். அபயம், வரம், ஹஸ்தம், பாசாங்குசத்துடன் காணப்படும் சுமார் மூன்றடி விக்ரகம் நிற்கும் திருக்கோலம். உயர்ந்த பட்டாடை விசிறி மடிப்புகளுடன். காதுகளில் வெள்ளியாலான தாடாங்கம். கழுத்தில் நீண்ட கல்மாலை. திருக்கழுத்தில் திருத்தாலி. திருநெற்றியில் வெள்ளியால் ஆன விபூதியின் நடுவில் காணப்படும் சந்தனம், குங்குமம் என அலங்காரத் தோற்றத்தில் அருள்பாலிக்கிறாள் அம்மன்.

மேலும் இத்திருக்கோயிலில் ஆனந்த விநாயகருக்கு என்று தனி சன்னிதி உள்ளது. மேலும் அருகே வள்ளி, தெய்வானை முருகனுக்கும் தனி சன்னிதி அமைந்துள்ளது. நவக்கிரக சன்னிதியும் அமைந்துள்ளது.மேலும் இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் மாசிமகத்தன்று, பதினெட்டு புண்ணிய நதிகளில் இருந்து தீர்த்தங்கள் கொண்டு வரப்பட்டு, பூஜை செய்யப்பட்டு எல்லா நதி தேவதைகளுக்கும் அந்தந்த நதியில் இருந்து கொண்டு வரப்பட்ட நீரில் அர்ச்சனை செய்யப்படுகிறது

அந்த நாளில் மட்டும் பக்தர்கள் ஒவ்வொரு நதி தேவதை, தன் கையில் வைத்திருக்கும் கலசத்தின் வழியாக வரும் நீரில் ஸ்நானம் செய்து, இறுதியாக திருக்குளத்தில் நீராடலாம். எல்லா புண்ணிய நதிகளிலும் நீராடிய பலன் கிடைக்கும் என்று கூறுகிறார்கள். கும்பகோணம் மகா மகத்தை நினைவுப்படுத்தும் புண்ணிய நீராடல் விழா. அத்தகைய சிறப்புப்பெற்ற இத்திருக்கோயில் தினசரி காலை 6.30 முதல் 9 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும் இத்திருக்கோயிலுள்ள அபிராமி அன்னையை வேண்டினால் அல்லல் நீங்கி பிரார்த்தனை செய்த காரியங்கள் யாவும் நடக்கும் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கை.



Leave a Comment