ஆடி அமாவாசை - குமரி பகவதி அம்மன் கோவிலில் 11-ந்தேதி சிறப்பு பூஜை
கன்னியாகுமரி பிரசித்திப் பெற்ற பகவதி அம்மன் கோவிலில் வருகிற 11-ந் தேதி ஆடி அமாவாசையையொட்டி சிறப்பு பூஜை நடக்கிறது. இதையொட்டி அன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் மூலஸ்தான நடை திறக்கப்பட்டு அபிஷேகம், ஆடி களபபூஜை, ஸ்ரீபலிபூஜை, தீபாராதனை, உஷபூஜை, உச்சிகால பூஜை போன்றவைகள் நடைபெறுகிறது.
மேலும் இந்த பூஜைகள் நடக்கும் போது பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள். அதன்பிறகு 5 மணிக்கு பக்தர்கள் தரிசனத்துக்காக கோவிலின் பிரதான நுழைவுவாயில் திறக்கப்படுகிறது. ஆடி அமாவாசையையொட்டி அம்மனுக்கு தங்ககவசம், வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்படும். தொடர்ந்து மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. பக்தர்களின் தரிசனத்துக்கு வசதியாக 1 மணி வரை கோவில் நடை திறக்கப்பட்டு இருக்கும்.
அன்று இரவு 8 மணிக்கு அம்மன் வெள்ளி கலைமான் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள். அதைத் தொடர்ந்து நள்ளிரவு 11 மணிக்கு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆறாட்டு நிகழ்ச்சியும், வருடத்தில் 5 விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கிழக்கு வாசல் அன்றைய தினம் திறக்கப்பட்டு அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
Leave a Comment