பிள்ளையார் சுழி போடுவது ஏன்?


மகாபாரதம் முழுக் கதையையும் வியாசரின் மனதில் தோன்றி நிலைத்து விட்டது. லட்சத்துக்கும் மேற்பட்ட ஸ்லோகங்களைக் கொண்ட அந்தக் காவியத்தை எப்படி எழுதுவது? அவ்வளவையும் எழுதுவது என்பது மிகவும் சிரமமான காரியம்! தேவலோகத்திலும் அதை எழுத யாரும் முன்வரவில்லை! செழுமையான கற்பனையோடு கூடிய அக்கதையை யார் எழுதுவது? என்ற கேள்வி…..

மிகவும் கடினமான அக்காரியத்தை தான் முடித்துத் தருவதாக விநாயக பெருமான் ஒப்புக்கொண்டார். ஆனால் விநாயகர் ஒரு நிபந்தனை விதித்தார். “என்ன அது?” என்று வியாசர் கேட்டார்.
“நடுவில் நிறுத்தக்கூடாது… அப்படி நிறுத்தினால் நான் எழுந்து போய்விடுவேன்” என்றார் விநாயகர்.
சரி என்று ஒப்புக்கொண்ட வியாசர் சற்றும் நிறுத்தாமல் சொல்லிக் கொண்டே போனார். எந்தவித எதிர்க்கேள்வி கேட்காமல் எழுதிக் கொண்டே போக வேண்டும் என்றார் வியாசர். ஒரு கட்டத்தில் வியாசருக்குப் பயம் வந்துவிட்டது. என்னடா இது! இந்தப் பிள்ளையார் எழுதுகின்ற வேகத்துக்கு நம்மால் சொல்ல இயலாது போலிருக்கே. உடனே வியாசரும் ஒரு நிபந்தனை விதித்தார்.

ஸ்லோகங்களைப் புரிந்துகொண்டு எழுதவேண்டும் என்பதே அது! இந்தப் பெரிய காரியத்திற்காக, தியாக உணர்வுடன் தனது தந்தத்தையே உடைத்து எழுதத் தயாராகி விட்டார் விநாயகர்! (யானைக்குத் தந்தம் அழகல்லவா?)

புரிந்துகொள்ள சிக்கலாக உள்ள இடங்களில் விநாயகர் சற்று யோசிக்க, வியாசர் பல ஸ்லோகங்களை மனனம் செய்து தயாராகி விடுவார்! இப்படித்தான் முழு மகாபாரதமும் வெற்றிகரமாக எழுதப்பட்டது!
எனவேதான் இப்பொழுதும் எதை எழுதுவதென்றாலும் தாளின் உச்சியில் “பிள்ளையார் சுழி’ போடுகிறோம்!

பத்ரிநாத்தில் வியாசர் மகாபாரதம் எழுதிய குகையும், பிள்ளையார் எழுதியவாறு அமர்ந்த கோலத்தில் இருப்பதையும் தரிசிக்கும் வண்ணம் ஒரு கோயில் உள்ளது. பத்ரிநாத்தில் இருந்து சீன எல்லைக்குப் போகும் வழியில் உள்ள “மானா” என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. இப்போதும் அந்தக் கோவிலையும், வியாசர் இருந்த குகையையும் தரிசிக்கலாம்.



Leave a Comment